ரிஷப் ஷெட்டியின் காந்தாரா திரைப்படத்தின் ஹிந்தி வெர்ஷன், பிரசாந்த் நீலின் பான் இந்தியா திரைப்படமான கேஜிஎப் சாப்டர் 1 (ஹிந்தி) இன் வாழ்நாள் கலெக்ஷனை மிஞ்சி சாதனை படைத்துள்ளது.
ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப் 2 படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான படம் "காந்தாரா". ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
கன்னட மொழியில் அந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு, பிற மொழியைச் சேர்ந்தவர்களும் அப்படத்தைப் பார்ப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதற்கேற்றாற்போல் காந்தாரா படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகி நல்ல வசூலை குவித்து வருகிறது.
இந்நிலையில் காந்தாரா திரைப்படம் ஹிந்தியில் கே.ஜி.எஃப் சாப்டர் ஒன் திரைப்படத்தின் வசூலை மிஞ்சி சாதனை படைத்துள்ளது. ஆம், பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் யஷ் நடிப்பில் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப் சாப்டர் 1. இந்த திரைப்படம் மெகா ஹிட் ஆகி, பாக்ஸ் ஆபிஸில் பெரும் சாதனை படைத்தது. ஹிந்தியில் கே.ஜி.எஃப் 1 திரைப்படம் 44.09 கோடி வசூல் செய்தது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் வாழ்நாள் சாதனையை முறியடித்துள்ளது காந்தாரா திரைப்படம். இந்த வார முடிவில் இந்தப்படம் 50 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பழங்குடி மக்களுக்கும் பண்ணையாருக்குமான நிலப் பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம், அரசு நிர்வாகம் நிலச்சுவான்தார்கள், பழங்குடி மக்கள் ஆகிய 3 பேரும் இடையேயான நில அரசியலை துல்லியமாக காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இப்படத்தை நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி, தனுஷ், ப்ரித்விராஜ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் பாராட்டி இருந்தனர். அந்த வரிசையில், அண்மையில் இந்தப்படத்தை பார்த்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தனது பாராட்டுகளை குழுவுக்கு தெரிவித்து இருந்தார்.