முன்னணி நடிகரும், தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் வரும் 17 ஆம் (மார்ச்,17,2023) தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 




உதயநிதி ஸ்டாலின் தனது அரசியல் பயணத்தை தொடங்கியதில் இருந்து இனி சினிமாவில் நடிக்க போவதில்லை என்று தெரிவித்திருந்தார். அதனால், அவர் கால்ஷீட் கொடுத்த படங்களில் மட்டும் நடித்து முடித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தார். அதில் ஒரு படம்தான் கண்ணை நம்பாதே திரைப்படம்.


கண்ணை நம்பாதே


இந்தப் படத்தில் ஹீரோயினாக ஆத்மிகா நடிக்கிறார்.  பூமிகா சாவ்லா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் படத்தில் நடித்துள்ளனர். சித்துக்குமார் இசையமைக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. த்ரில் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் பட ரிலீஸிற்கு ஆவலாக காத்திருக்கின்றனர். 


‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை அடுத்து மு.மாறன் இயக்கும் படம் ’கண்ணை நம்பாதே’. சித்துக்குமார் இசையமைத்திருக்கிறார். ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித்குமார் தயாரிக்கிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கலகத் தலைவன்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 


 ’ கண்ணை நம்பாதே’ திரைப்படம் ட்ரெய்லர் பார்த்தபோதே ரசிகர்கள் க்ரைம் த்ரில்லருக்கான அத்தனை அம்சங்களையும் கொண்டு படம் இது என்று பாரட்டினர். அதோடு ஆவலோடு காத்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். அடுத்தடுத்து என்ன நடக்கும் என கணிக்க முடியாத கதையுடன் இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. ‘இந்த உலகத்துல நடக்குற எல்லா கொலைகளுக்குப் பின்னாடியும் அழுத்தமான காரணம் இருக்கும்’ என தொடங்கும் ட்ரெய்லர். இரவில் நடக்கும் காட்சிகளில் ஒளிப்பதிவு நன்றாக இருக்கும் என்று ட்ரெயிலர் உணர்த்தியிருந்தது. 






சென்னையில் நடைபெற்ற ’கண்ணை நம்பாதே' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் பேசியதன் விவரம்: 


 ’கண்ணை நம்பாதே’ படம் ஷூட்டிங் தொடங்கும்போது நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என நினைத்து பார்க்கவில்லை.என்னுடைய திரைப்பட வாழ்க்கையி நான்கரை ஆண்டுகாலம் எடுத்த படம் என்றால் அது கண்ணை நம்பாதேதான்.  2018-ஆம் ஆண்டு இறுதியில் படம் தொடங்கியது. இந்தபடத்தை அருள்நிதி தான் எனக்கு  பரிந்துரை செய்தார். க்ரைம் த்ரில்லர் ஒன்றை செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். அதற்கேற்றபடி ஒரு கதையை இயக்குநர் மாறன் என்னிடம் கூறினார்.


அதன்பின்னர் படம் தொடங்கியது. இந்தப் படம் ரிலீசாகுமா என்ற சந்தேகம் இருந்தது.  படம் முழுக்க இரவு தான் நடக்கும். கொரோனா பரவல் வந்ததாலும படம் வெளிவர காலதாமதமாகிவிட்டது. இதில் ஒரே பாடல்தான் இடம்பெற்றுள்ளது. நான் ரெட் ஜெயன்டிலிருந்து முழுமையாக வெளியேறிவிட்டேன். அதை செண்பகமூர்த்தியும், அர்ஜூனும் பார்த்துகொள்கின்றனர். என்னுடைய படத்தை ரிலீஸ் செய்வதற்கு நன்றி. இந்தப்படம் தொடங்கும் போது நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேனா என்பது பற்றியெல்லாம் நான் அறிந்திருக்கவில்லை.


இன்றைக்கு அமைச்சராகிவிட்டேன். இந்தப்படத்தின் முதல் ஷெட்யூல் வரும்போது பொண்ணு பார்த்தார்கள். இரண்டாவது ஷெட்யூல் கல்யாணம் ஆகிவிட்டது. மூன்றாவது, நான்காவது ஷெட்யூலில் குழந்தை பிறந்துவிட்டது என நடிகர் சதீஷ் கூறுவார். அப்படி ரொம்ப காலம் எடுத்து உருவானது இப்படம். நான்கரை ஆண்டுகள் உழைத்து தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்.இந்த படமும் பட்ஜெட் படம்தான். ஆத்மிகா 12ம் வகுப்பு படிக்கும்போது படத்தில் இணைந்தார். தற்போது அவர் கல்லூரி படிப்பையே முடித்து விட்டார்” என்றார்.