கே.ஜி.எஃப், கே.ஜி.எஃப் 2, மாஸ்டர் பீஸ் போன்ற சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு "காந்தாரா". ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கன்னடத்தில் உருவான இப்படம் செப்டம்பர் 30ம் தேதியன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


 



மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்படும் "காந்தாரா" : 


ரிஷப் ஷெட்டி, கிஷோர், பிரமோத் ஷெட்டி, அச்யூத் குமார், ஷாலினி குரு ஆகியோரின் நடிப்பில் வெளியான இப்படம் எதிர்பாராத அளவிற்கு வெற்றியை கொடுத்துள்ளது. மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த கன்னடத்தில் உருவான "காந்தாரா" திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிட திட்டமிட்டு இருந்தது தயாரிப்பு நிறுவனம். ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்ட இப்படம் அக்டோபர் 14ம் தேதியும், தெலுங்கில் அக்டோபர் 15ம் தேதியும் வெளியாகும் எனும் தகவல் ஏற்கனவே வெளியானது. அந்த வகையில் தற்போது "காந்தாரா" திரைப்படத்தின் தமிழ் டப்பிங் திரைப்படம் அக்டோபர் 16ம் தேதி வெளியாகும் என்ற அதிகாரபூர்வமான தகவலை போஸ்டருடன் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். 


 







"காந்தாரா" திரைப்படத்திற்கு ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து அமோகமாக வெற்றியடைய செய்துள்ளனர். கேஜிஎஃப் படத்தின் கதையோடு ஒப்பிடும் போது இது வித்தியாசமான பின்னணியில், ஜானரில் உருவாகியுள்ளது. கன்னட கலாச்சாரத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கன்னட மக்கள் மட்டுமின்றி மற்ற அனைத்து மாநிலத்தில் உள்ள ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து மற்ற மொழிகளிலும் இப்படம் அமோகமான வரவேற்பை பெரும் என்று மிகுந்த நம்பிக்கையில் உள்ளனர் படக்குழுவினர்.


 






 


பொன்னியின் செல்வன் வசூலை பாதித்த "காந்தாரா" : 


இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான "பொன்னியின் செல்வன்" திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக வெளியானது. தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் இப்படம் சக்கை போடு போட்டு சாதனை படைத்து வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வரும் நிலையில், கன்னட மாநிலத்தில் மட்டும் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது கன்னடத்தில் வெளியான "காந்தாரா" திரைப்படம். இப்படத்தினை திரையரங்குகளில் அதிகமான காட்சிகளை ஓட்ட நினைத்து பல திரையரங்குகளில் இருந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நீக்கியுள்ளனர் என கூறப்படுகிறது. இதற்கு அரசியல் பின்னணியும் இருக்க வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது "காந்தாரா" திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு அக்டோபர் 16ம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காந்தாரா திரைப்படத்தை தமிழ் டிரைலர் இதோ உங்களுக்காக :