பெங்களூரில் நடிகை கதறி அழுததை பார்த்து, திருடிய நாயை திருப்பி கொண்டு வந்த திருடன் செய்த சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.


பெங்களூரு நாகாரபாவி டெலிகாம் லே - அவுட் பகுதியில் வசித்து வருபவர் நிருஷா. கன்னட படங்களிலும், சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள அவர், 8 வயது டிவிங்கிள் என்ற பெண் நாயை வளர்ந்து வந்தார். நாயை தனது மகளாகவே பாவித்து வந்த நிருஷா, வீட்டிற்கு வந்த உடன் அதனுடன் விளையாடுவதையும், நேரத்தை செலவழிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.


இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென்று டிவிங்கிள் காணாமல் போனது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த நிருஷாவும், அவரது அம்மாவும் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் எந்த பயனும் இல்லை. இதனால் மனம் நொந்து போன நிருஷா சாப்பிடாமல், தூங்காமல் டிவிங்கிளின் நினைவாகவே இருந்தார்.


 




இதனையடுத்து தனது தோழிகள்கொடுத்த அறிவுரையின் படி, இன்ஸ்டாவில் கதறி அழுது பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் டிவிங்கிள் எனது மகள் போன்றவள். அவள் இல்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. யார் எடுத்திருந்தாலும் தயவு செய்து கொடுத்து விடுங்கள்” என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.



 


இது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது. இது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதனை நாயை தூக்கிச்சென்ற திருடனும் பார்த்திருக்கிறார். நிருஷா அழுததை பார்த்து மனமுருகிய திருடன், நேற்று  நிருஷா வீட்டின் அருகிலுள்ள கோயில் முன்பு, திருடப்பட்ட நாயை விட்டு சென்று, நிருஷா அம்மாவை போனில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்து இருக்கிறார்.


 






இதனையடுத்து நிருஷா அம்மாவும், நிருஷாவும் ஓடிச்சென்று நாயை வீட்டிற்கு தூக்கிச் சென்றனர். நாய் கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்த அவர், ஒரு வீடியோவை வெளியிட்டு நன்றி தெரிவித்தார்.