நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள ரஜினியின் 169வது படத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வர இருப்பதாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது. அதனை அடுத்து, ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ்(Sun Pictures) தயாரிக்க இருப்பது உறுதியானது. நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் இப்படம் உருவாக உள்ளது.
இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இந்நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சிவ ராஜ்குமாரை நெல்சன் தரப்பு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், விரைவில் பெங்களூருவில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
வேதா என்ற படத்தில் தற்போது கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் நடித்து வருகிறார். ரஜினியின் படத்தை ஒப்புக்கொண்டால் ரஜினியோடு கைகோக்கும் முதல் படமாக ராஜ்குமாருக்கு இது இருக்கும்.
ரஜினியின் 169வது படம் ஜூலை அல்லது ஆகஸ்டில் தொடங்கும் என்றும், படம் அடுத்த வருடம் திரைக்கு வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ரஜினிகாந்தின் 169வது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குவாரா என்று கேள்விகள் சோஷியல் மீடியாவை அலற வைத்தன. விமர்சன ரீதியாக பீஸ்டின் தோல்வி ரஜினிகாந்தின் அடுத்தப்படம் வரை எதிரொலித்தது. ரஜினி விலகிவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் பரவுவது எல்லாம் வதந்தி என நெல்சல் தன்னுடைய ட்விட்டர் பலோ மூலம் தெரிவித்தார். தனது டுவிட்டர் பக்கத்தில் நெல்சன் தலைவர் 169 படத்தை இயக்குவதை தனது பயோ-வில் அப்டேட்டாக செய்து குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.