பழங்காலம் தொட்டு இன்று வரை நம்  ஊரில் உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு முதலில் பரிந்துரைக்கப்படும் உணவு கஞ்சி.


கஞ்சி கண்ட இடம் கைலாசம்


‘கஞ்சி கண்ட இடம் கைலாசம்...’ ‘கடன் இல்லாக் கஞ்சி கால் வயிறு’ என அந்தக் கால பழமொழிகள் தொடங்கி நம் ஊரின் பாரம்பரிய மற்றும் எளிமையான உணவாக கஞ்சி குறிப்பிடப்பட்டு புழக்கத்தில் இருந்து வந்துள்ளது.


தமிழ்நாடு தவிர கேரளா, ஆந்திரா என அண்டை மாநிலங்களிலும், நம் உணவுப் பாரம்பரியத்தை ஒத்த கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் கூட கஞ்சி ஒரு சிறந்த உணவாக பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.  வடித்த சாதம் தவிர்த்து, சத்து மாவு தொடங்கி ஓட்ஸ் வரை அனைத்திலும் கஞ்சி செய்யலாம். 


தலசேரி கஞ்சி


இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தலசேரி கேர்ள் என அறியப்படும் மரீனா பாலகிருஷ்ணன் எனும் பெண் மூலம் கஞ்சி உணவானது தற்போது பாலிவுட் நடிகைகள் மத்தியில் பிரபலமாகி உள்ளது.


முன்னதாக கேரளாவின் பாரம்பரிய கஞ்சி பற்றி இவர் பகிர்ந்த பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலானது. இவரது பதிவையடுத்து, பாலிவுட் நடிகைகளான அனுஷ்கா ஷர்மா, அதிதி ராவ் ஹைதாரி இருவரும் கஞ்சி சமைத்து உண்டு அதனை தங்கள் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தனர்.


இதனையடுத்து ஊட்டச்சத்து நிபுணர்கள், டயட்டீசியன் என அனைவர் மத்தியிலும் சமீப காலமாக கஞ்சி உணவு பிரபலமைடந்து வருகிறது. இந்நிலையில், கஞ்சி உணவை சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள் குறித்து காணலாம்.


செரிமானத்துக்கு நல்லது


உணவியல் நிபுணர்களின் கூற்றுப்படி கஞ்சியை நோயாளிகள் உட்கொள்வது மிக நல்லது. ஏனெனில் இது வயிறு தொடர்பான பிரச்சினைகளை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் குடல் ஆரோக்கியத்தைப் பேண உதவுகிறது. அதிக அளவு தண்ணீர் சேர்த்து சமைப்பதாலும், மசிந்த நிலையில் இருப்பதாலும் இந்த உணவு எளிதில் செரிமானமாகிறது.


நீரேற்றத்துக்கு நல்லது


கஞ்சியில் தண்ணீரும் அரிசியும் 10:1 என்ற விகித தொடங்கி 7:1 என்ற விகிதம் வரை பொதுவாக உள்ளது. கைக்குழந்தைகளுக்கு, 13 பங்கு தண்ணீரைப் பயன்படுத்தி கஞ்சியைத் தயாரிக்க பரிந்துரைக்கப்படுகிறது.


கஞ்சியில் அடிப்படையில் 80-90 சதவீதம் தண்ணீர் உள்ளது. நீண்ட நேரம் சமைப்பதால் அரிசி தானியங்கள் நிறைய தண்ணீரை உறிஞ்சிவிடுகிறது. இதனால் நோய்வாய்ப்பட்ட நாட்களில் இதை சாப்பிடுவது புத்துணர்ச்சியூட்டும் வகையிலும் உடல் நீரேற்றத்துக்கும் உதவுகிறது.


தண்ணீரைத் தவிர, சிக்கன் ஸ்டாக் அல்லது எலும்பு மஜ்ஜையைப் பயன்படுத்தியும் கஞ்சி தயாரிக்கலாம், இது எளிதில் ஜீரணிக்கக்கூடியதாக மட்டுமல்லாமல், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.


குறைவான கலோரி 


கஞ்சியில் தண்ணீரின் அளவு அதிகமாகவும், கார்போஹைட்ரேட் அளவு குறைவாகவும் உள்ளதால் இது பசியையும் குறைக்கிறது.


சளி, காய்ச்சலுக்கான உணவு


நிபுணர்களின் கூற்றுப்படி, இஞ்சி மற்றும் நறுக்கிய வெங்காயத்தை உணவில் சேர்த்து கஞ்சி குடிப்பது சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல உணவாக அமைகிறது.