நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கங்குவா (Kanguva) படத்தின் அட்டகாசமான டீசர் வெளியாகியுள்ளது. 


கங்குவா படம்


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் சூர்யா நடிப்பில் கடைசியாக 2022 ஆம் ஆண்டு எதற்கு துணிந்தவன் படம் வெளியானது. அதன்பிறகு சிறப்பு தோற்றத்தில் விக்ரம், ராக்கெட்ரி ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தாலும் ஹீரோவாக நடித்த படம் வெளியாகி 2 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆம்! கங்குவா படத்துக்காக தான் ஒட்டுமொத்த சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவும் காத்திருக்கிறது. 






கமர்ஷியல் இயக்குநராக தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்த சிறுத்தை சிவா தான் இப்படத்தை இயக்கியுள்ளார். கங்குவா படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி தமிழில் அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பல பிரபலங்களும் கங்குவா படத்தில் இணைந்துள்ளனர்.


நீண்ட இடைவெளிக்குப் பின் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. 


அடுத்தடுத்து வெளியான அப்டேட்


கங்குவா படத்தில் சூர்யா 13 விதமான தோற்றங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாகிறது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் டைட்டில் வெளியான நிலையில், ஜூலை 23 ஆம் தேதி சூர்யா பிறந்தநாளன்று படம் பற்றிய கிளிம்ப்ஸ் வீடியோ ரிலீசானது. அதில் மிரட்டும் லுக்கில் சூர்யாவும், வித்தியாசமான கிராபிக்ஸ் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பின்னர் சூர்யா குதிரையில் வருவது போல ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. கடந்த ஜனவரி மாதம் கங்குவா படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்தது. 



வெளியான டீசர்


இதனைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கங்குவா படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ள அனைத்து காட்சிகளும் மிரட்டுகிறது. குறிப்பாக சூர்யாவும், பாபி தியோலும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்துள்ளனர்.  மேலும் புலி, பாம்பு, முதலை, யானை, குதிரை என முதலிய உயிரினங்களும் கிராபிக்ஸ் ஆக இருந்தாலும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கில் பார்வைகளை பெற்றுள்ளது.