நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. இந்த படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது. கங்குவா படத்தின் நாயகன் சூர்யா, நாயகி திஷா பதானி, பாபி தியோல், ஆரஷ் ஷா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி என பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாபி தியோல், திஷா பதானி ஆகியோருடன் நடிகர் சூர்யா படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது நிருபர் ஒருவர் நீங்கள் ஒரு சூப்பர்ஸ்டார் என்று கேள்வியைத் தொடங்க முற்பட்டார்.
ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்:
அப்போது, அந்த நிருபர் கேள்வியை முடிக்கும் முன்னரே சூர்யா ரஜினிகாந்த் சார் மட்டுமே சூப்பர்ஸ்டார். எங்களால் அந்த பட்டத்தை கடன் வாங்க முடியாது என்று கூறினார். சூர்யாவின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். சூர்யாவின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கொடி கட்டிப் பறப்பவர் ரஜினிகாந்த். சமீபகாலமாக தமிழில் அடுத்த சூப்பர்ஸ்டார் யார்? என்ற விவாதம் மேடைகளிலும், நிகழ்ச்சிகளிலும் எழுந்து வருகிறது. இதனால், இணையத்தில் வாதங்களும், கருத்து மோதல்களும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கூறி வந்த நிலையில், நடிகர் விஜய்யே மேடையில் ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் என்று கூறி அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவுக்கு பாராட்டு:
ஒவ்வொரு திரையுலகிற்கும் ஒரு சூப்பர்ஸ்டார் இருந்தாலும் பொதுவாக இந்திய திரையுலகைப் பொறுத்தவரை சூப்பர்ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் மட்டுமே அனைவரது நினைவிற்கும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், நடிகர் சூர்யா சூப்பர்ஸ்டார் பட்டத்துடன் அழைத்தபோது அதற்கு பணிவுடன் மறுப்பு தெரிவித்ததற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பிரம்மாண்ட பட்ஜெட்:
இயக்குனர் சிவா இயக்கியுள்ள இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு திரைக்கதையை ஆதி நாராயணாவும், மதன் கார்க்கியும் எழுதியுள்ளனர். சூர்யா இதுவரை நடித்த படங்களிலே மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம் இந்த படம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 300 முதல் 350 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நட்ராஜ், ஜெகபதிபாபு, கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.