கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படம் வரும் நவம்பர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் இப்படத்தை தயாரித்துள்ளது. பாபி தியோல் , திஷா பதானி , யோகி பாபு , ரெடின் கிங்ஸ்லி , கருணாஸ் , போஸ் வெங்கட் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தேவிஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கங்குவா படத்தின் ப்ரோமோஷனின் போது நடிகர் சூர்யா ஜெய் பீம் படத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஜெய் பீம் பற்றி சூர்யா
த.செ ஞானவேல் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் ஜெய் பீம். மணிகண்டன் , லிஜோமோல் ஜோஸ் , சூர்யா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். சூர்யாவின் 2D என்டர்டெயின்மெட்ண்ட் இப்படத்தை தயாரித்தது. ஓய்வுபெற்ற நீதிபதி சந்த்ரு அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவானது. பழங்குடி சமூதாயத்தைச் சேர்ந்த சாமிகண்ணு என்பவர் செய்யாத குற்றத்திற்காக காவல்துறையால் கொல்லப்பட்டதும் சாமிகண்ணுவின் மனைவி செங்கோடி தனது கணவனின் இறப்பு நீதிமன்றத்தில் நடத்திய போராட்டத்தை இப்படம் பேசியது. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் சினிமாத் துறையில் மட்டுமில்லாமல் அரசியல் களத்திலும் பெரியளவில் கவனமீர்த்தது. கங்குவா படத்தின் ப்ரோமோஷனின் போது சூர்யா இப்படத்தைப் பற்றி இப்படி பேசினார்
" என்னுடைய நண்பர் ஞானவேலும் நானும் இந்த சிறைச்சாலை மரணங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். சில உண்மை சம்பவங்களை மையமாக வைத்து அவர் இந்த படத்தை இயக்கினார். ஜெய் பீம் படத்திற்கு பின் 3 லட்சம் மக்கள் பயணடைந்துள்ளதாக எங்களிடம் தரவுகள் இருக்கிறது. சில படங்கள் நம்மைக் கடந்தும் நினைவுகூறப்பட வேண்டும். இந்த மாதிரியான படங்கள் வெறும் பாக்ஸ் ஆபிஸ் தகவல் மட்டும் கிடையாது. சில படங்கள் நம்மை சுத்தப்படுத்தும். நம்மை ஒரு நல்ல மனிதனாக மாற்றக்கூடியவை. இசை , திரைப்படங்கள் ஒரு சமூகத்தின் குரல்கள். இவற்றை நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். வெறுமனே வெள்ளி சனிக்கிழமை பாக்ஸ் ஆபிஸில் வசூலீட்டும் படங்கள் மட்டுமே முக்கியமில்லை." என சூர்யா தெரிவித்துள்ளார்.