சூர்யா
நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தின் ப்ரோமோஷன்களில் பிஸியாக பங்கேற்று வருகிறார். சினிமா தவிர்த்து தனது அகரம் அறக்கட்டளை சார்பாக பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவிகளை செய்து வருகிறார் சூர்யா.
" பணம் எப்போதுமே ஒருவரது எதிர்காலத்திற்கு தடையாக இருக்க கூடாது. அப்படிதான் அகரம் அறக்கட்டளை தொடங்கியது. இன்று 2024 ஆம் ஆண்டில் கூட முதல் தலைமுறை பட்டதாரி படிக்கும் மாணவர்கள் இருக்கிறார்கள். அந்த முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு தான் அகரம் உதவிக்கரம் கொடுக்கிறது. அகரம் தொடங்கி 16 ஆண்டுகள் கடந்துள்ளன. இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அகரமில் படித்து பட்டம் பெற்றுள்ளார்கள். இதில் 70 சதவீதம் பேர் பெண்கள். இது நன்கொடை கிடையாது இது ஒரு பொறுப்பு. எனக்கு பிறகு இதை என் மகன் மற்றும் மகள் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தான் விருப்பம்” என சூர்யா முன்னதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தெலுங்கில் பாலைய்யா தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாணவி ஒருவர் தனது தந்தை இறந்துபோனது பற்றியும் தனது அம்மா தன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்ததான கூறினார். இதனைக் கேட்ட சூர்யா தனது கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் நிகழ்ச்சியில் அழுதார். இந்த வீடியோ ரசிகர்களால் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.