பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டரில் சர்ச்சைக்குரிய ட்வீட்களை போஸ்ட் செய்வதில் கை தேர்ந்தவர். அவரின் பல ட்வீட்கள் கலவரத்தை ஏற்படுத்திய காரணத்தால் ட்விட்டர் நிர்வாகம்  அவரின் கணக்கை முடக்கியது. பின்னர் விடுவிக்கப்பட்ட பிறகு மீண்டும் தனது வழக்கமான கண்டனங்களை பதிவு செய்ய துவங்கிவிட்டார். 


அந்த வகையில் தற்போதைய அவரின் கண்டனம் கோயிலுக்குள் சில பெண்கள் வெஸ்டர்ன் உடையில் சாமி தரிசனம் செய்ய வந்ததை கண்டித்து ட்விட்டரில் கடுமையாக தனது கருத்தை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 


 



கங்கனா கண்டனம் :


இமாச்சல பிரதேசத்தில் உள்ள காங்க்ராவில் உள்ள பைஜ்நாத் கோயிலுக்கு பெண்கள் இருவர் கிராப் டாப் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து ஒரு பெண்ணும், டெனிம்ஸில் சால்வையை அணிந்து மற்றொரு பெண்ணும் காணப்பட்டனர். அந்த புகைப்படங்களை ட்விட்டர் பயனாளர் ஒருவர் போஸ்ட் செய்து, அதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். அதை ரீ ட்வீட் செய்த கங்கனா 'இது ஹிமாச்சலத்தின் புகழ்பெற்ற பைஜ்நாத் சிவன் கோயில். இந்த கோயிலுக்கு இரவில் உடுத்தும் உடை மற்றும் பப் செல்வது போல உடை அணிந்து வந்துள்ளனர். இப்படி உடை அணிந்து வருபவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது. நான் இதை கடுமையாக எதிர்க்கிறேன். இதைப் பார்த்து எனது சிந்தனை கெட்டது என்றால் அதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கது' என பதிவிட்டு இருந்தார் கங்கனா. 


திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்தாலும் கோயில்களுக்கு செல்லும் போது மிகவும் அடக்கமாக சல்வார் அல்லது புடவையில் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டவர் கங்கனா ரனாவத் என்பது குறிப்பிடத்தக்கது.


தன்னுடைய அனுபவம் பகிர்ந்த ரனாவத் :


மேலும் ஒரு முறை தன்னுடைய அனுபவம் குறித்தும் பகிர்ந்து இருந்தார். "ஒரு முறை வாடிகன் சர்ச்சுக்கு ஷார்ட்ஸ் டிஷர்ட் அணிந்து சென்றதால் அவர்கள் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. நான் ஹோட்டலுக்கு சென்று உடையை மாற்றிக்கொண்டு சென்றேன். இது போன்ற கடுமையான நடவடிக்கைகள் இங்கேயும் செயல்படுத்தப்பட வேண்டும். கோயிலுக்கு அரைகுறையாக ஆடை அணிந்து வரக்கூடாது என்ற அறிவு இல்லாத இவர்களுக்காக கடுமையான விதிகளை கோயில் நிர்வாகம் செயல்முறை படுத்த வேண்டும்” என கடுமையாக சாடியிருந்தார் கங்கனா ரனாவத். 


தற்போது எமர்ஜென்சி என்ற படத்தில் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரே இப்படத்தை இயக்கி உள்ளார். மேலும்  ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார் கங்கனா.