சிறுவயதில் நான் வசித்த அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர் என்னை அடிக்கடி தகாத முறையில் தொடுவான் என சிறுவயது மோசமான நினைவுகளை பகிர்ந்தார் கங்கனா ரணாவத்


பாலிவுட்டின் பிரபல நடிகை கங்கனா ரணாவத் அண்மையில் ஏ.எல்.விஜய் இயக்கி வெளியான தலைவி படத்தில் நடித்திருந்தார். அதுபோக கங்கனா ரணாவத் தற்போது லாக் அப் என்ற ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறார். இதனை பாலாஜி டெலிபிலிம் நிறுவனர் ஏக்தா கபூர் தயாரித்து வருகிறார். ஓடிடி தளத்தில் மட்டும் ஒளிபரப்பப்பட்டு வரும் லாக்-அப் ரியாலிட்டி ஷோவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.


16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சி 72 நாட்கள் ஒளிபரப்பாக உள்ளது. இதில் அமெரிக்க சிறை போன்ற செட்டில் போட்டியாளர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சினிமா பிரபலங்கள், தங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல கொடுமைகளை வெளிப்படையாக கூறி வருகிறார்கள். 



அந்த வகையில் 'லாக் அப்' 56வது நாளில் கலந்து கொண்ட முனாவர் ஃபாருக்கி என்ற போட்டியாளர், தாம் சிறு வயதில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக அதிர்ச்சியான தகவலை பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 6 வயதில் தொடங்கிய இந்த பாலியல் தொல்லை 11 வயது வரை தொடர்ந்தது. அதுபற்றி என்னால் அப்போது புரிந்துகொள்ள முடியவில்லை. இதுகுறித்து எனது குடும்பத்தினர் உள்பட யாரிடமும் பகிர்ந்து கொண்டது கிடையாது. இதுபோன்ற காரியத்தில் ஈடுபட்டவர்கள் எனது உறவினர்கள்தான் என்று தெரிவித்தார்.


இதைக்கேட்ட நடிகை கங்கனா ரனாவத், தானும் சிறு வயதில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டதாகக் கூறி அதிர்ச்சி அளித்தார். அவர் கூறுகையில், “சிறுவயதில் நான் வசித்த அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர் என்னை அடிக்கடி தகாத முறையில் தொடுவான். சில சமயங்களில் என்னை அழைத்து வந்து ஆடைகளை கழட்டச் சொல்வான்." என்று கூறினார்.



மேலும் பேசிய அவர், "அந்த பையன் என்னை விட 4 வயதுதான் மூத்தவன். அப்போது எனக்கு எதுவும் புரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். ஒவ்வொரு குழந்தையும் தங்களது குடும்பம் எவ்வளவு பாதுகாப்பானதாக இருந்தாலும், குழந்தைகள் இது போன்ற சம்பவங்களை சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் இதுகுறித்து யாரும் பொதுவெளியில் பேசுவதில்லை. சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் குறித்து பெற்றோர்கள் கற்பிப்பது அவசியம். அதன்மூலம் மட்டுமே சமூகத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் நிகழாமல் தடுக்க முடியும்” என கங்கனா கூறி உள்ளார்.


அவர் கூறியதை தொடர்ந்து நிகழ்ச்சி போட்டியாளரான சாயிஷா ஷிண்டேவும் தனக்கு நேர்ந்ததை பகிர்ந்து கொண்டு, ஒரு திருநங்கையாக இந்த விஷயங்களை வெளியில் சொல்லும்போது என்னென்ன வார்த்தைகளை எதிர்கொள்கிறோம் என்று குறிப்பிட்டார். கேட்பவர்கள் தன்னை ஓரின செயற்கையாளர் என்று கூறுவதாகவும், திருநங்கை என்பதால்தான் அப்படி நடக்கிறது என்றும் கூறினர் என்று கூற எமோஷனலாக மாறியது லாக்கப் எபிசோட்.