மதச்சார்பின்மை, ஜனநாயகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து நீக்கிய சி.பி.எஸ்.இ. இன் நடவடிக்கைக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வைகோ, மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ஜனநாயகம், முகலாய ஆட்சி குறித்த பாடங்களை நீக்கியதன் பின்னணியில், ஆர்.எஸ்.எஸ்.-இன் சிந்தனை போக்கு உயர்ந்துள்ளது.ஒரே நாடு;ஒரே மதம்;ஓரே பண்பாடு; ஒரே மொழி; எனும் ‘இந்து ராஷ்டிரா’ அமைப்பின் கொள்கைக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், இந்த முடிவு வரலாற்று உண்மைகளை மறைத்து பள்ளி பாடங்களை மாற்றுவது கடும் கண்டனத்திற்கு உரியது’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ஜெர்மனிய ஹிட்லர் அரசும், இத்தாலியின் முசோலினி அரசும் இப்படித்தான் பள்ளிக் குழந்தைகளுக்கு மூளைச் சலவை செய்வதற்கு, பாடத் திட்டங்களில் பாசிச நச்சுக் கருத்துகளைத் திணித்தார்கள். ஆனால் அந்த அரசுகள், வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசப்பட்டன என்பதை மறந்து விடக் கூடாது. அதுபோல, பாஜக அரசின் வரலாற்றுத் திரிபு வேலைகள் வெற்றி பெறாது.” என்று வைகோ தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வைகோ, வரலாற்றுப் பாடங்களை நீக்குவதையும், இருட்டடிப்புச் செய்வதையும், இந்துத்துவக் கருத்துகளைத் திணிப்பதையும் பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சி.பி.எஸ்.இ. இன் முக்கிய பாடப்பிரிவு நீக்கம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ராகுல் காந்தி, ‘Central Board of Supressing Educatiuon’ என்று குறிப்பிட்டு, ஜனநாயகம், பன்முகத்தன்மை, முகலாய ஆட்சி குறித்த பாடங்களை சி.பி.எஸ்.இ. நீக்கியிருப்பது நியாமற்றது.’ என்று ஒரு விளக்ப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
+1, +2, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் முக்கிய பகுதிகள் நீக்கியிருப்பதன் பின்னணி:
அணிசேரா இயக்கங்கள், பனிப்போர் காலம், ஆப்ரோ-ஆசியப் பகுதிகளில் இஸ்லாமியப் பேரரசுகளின் எழுச்சி, முகலாய பேரரசுகளின் வரலாறு மற்றும் தொழில்துறை புரட்சி பற்றிய அத்தியாயங்களை 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்திட்டங்களில் இருந்து சிபிஎஸ்சி நீக்கியிருக்கிறது.
இதேபோல், 10ம் வகுப்பு பாடத்திட்டத்தில், 'உணவு பாதுகாப்பு' என்ற தலைப்பில் இருந்து, "உலகமயமாக்கலால் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம்" என்ற தலைப்பும் கைவிடப்பட்டுள்ளது. 'மதம், வகுப்புவாதம் மற்றும் அரசியல் - வகுப்புவாதம், மதச்சார்பற்ற அரசு' பகுதியில் ஃபைஸ் அகமது ஃபைஸின் உருது மொழியில் இரண்டு கவிதைகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட பகுதிகளும் இந்த ஆண்டு விலக்கப்பட்டுள்ளன.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) 'ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை' என்ற பாடத்தின் உள்ளடக்க அத்தியாயங்களிலிருந்தும் சிலவற்றை நீக்கியுள்ளது.
தலைப்புகள் அல்லது அத்தியாயங்கள் கைவிடப்பட்டதன் பின்னணியில் உள்ள காரணத்தைக் கேட்டதற்கு விளக்கமளித்துள்ள அதிகாரிகள், ”இந்த மாற்றங்கள் பாடத்திட்டத்தைப் பகுத்தறிவதன் ஒரு பகுதி என்றும் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCERT) பரிந்துரைகளுக்கு இணங்குவதாகவும்”, அவர்கள் கூறியிருந்தனர்.
கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இரண்டு பருவத் தேர்வு ஒரே முறையில் வைக்கப்படும் என சிறப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டாலும், நிலைமையை மனதில் வைத்து சரியான நேரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று வாரிய அதிகாரிகள் கடந்த வாரம் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், பல காலமாகப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த சில முக்கிய அத்தியாயங்களை பாடத்திட்டத்தில் இருந்து சிபிஎஸ்இ கைவிடுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.