பிரபல நடிகை கங்கனா ரனாவத் நடிகர் யஷ்ஷை பாலிவுட் நடிகர் அமிதாபச்சனுடன் ஒப்பிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
அவர் குறிப்பிட்டு இருக்கும் அந்தப்பதிவில், “ இப்படிப்பட்ட கோபமான மனிதரை ( ஆங்க்ரி யங் மேன்) இந்திய சினிமா கடந்த சில வருடங்களாக மிஸ் செய்து கொண்டிருந்தது. நடிகர் யஷ் எழுபதுகளில் அமிதா பச்சன் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புகிறார். மிக சிறப்பு. முன்னதாக அமிதாபச்சன் டான், திவார், சக்தி, அக்னிபாத் ஆகிய படங்களில் நடித்ததின் மூலம் ஆங்கிரி யங் மேன்” என்ற பெயரை பெற்றிருந்தார்.
இது மட்டுமன்றி, யஷ், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் , அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர்களின் படங்களை பதிவிட்ட கங்கனா, “ தென்னிந்திய கலைஞர்கள் அவர்களின் கலாச்சாரத்தில் வேரூன்றி இருக்கிறார்கள். அவர்களின் கடின உழைப்பு, திறமை உள்ளிட்டவற்றைத் தாண்டி அவர்களின் நம்பகத்தன்மையே ரசிகர்களை ஈர்க்கிறது” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மிரட்டிய கே.ஜி.எஃப்
கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என வெளியாகிய அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. இதனால், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஊரடங்கு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதில் காலதாமதம் ஏற்பட்டது
இருப்பினும் இரண்டாண்டுகளாக தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு ஓரளவு பணிகள் நிறைவு செய்த நிலையில், வரும் 2022ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி இந்த படத்திற்கான இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப்படம் 240 கோடிக்கு மேல் வசுலித்து உள்ளதாக பட நிறுவனம் தெரிவித்தது.