கங்கனா ரனாவத் தனது சமீபத்திய படமான தாக்கட், பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்ததாகப் பரப்பப்படும் செய்தி அறிக்கைகள் தனக்கு எதிரான ஒரு பிரச்சாரத்தால் தூண்டப்பட்டதாக கூறியுள்ளார். மற்ற சமீபத்திய பாக்ஸ் ஆபிஸ் தோல்விகளின் உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டினார், மேலும் ஏன் யாரும் அவற்றைப் பற்றி பேசவில்லை என்று கேட்டார்.


பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு  தாக்கட் படத் தயாரிப்பாளர் தீபக் முகுத் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக கங்கனா தனது கருத்துக்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் பதிவிட்டுள்ளார். முதலீட்டாளர்களுக்கு திருப்பிச் செலுத்துவதற்காக சொத்துக்களை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக வெளியான தகவலை தயாரிப்பாளர் மறுத்திருந்தார். இதைக் குறிப்பிட்ட கங்கனா “எனது தயாரிப்பாளர் தீபக் முகுத் தனது அலுவலகத்தை விற்கவில்லை. அவர் தனது அனைத்து செலவுகளையும் மீட்டெடுத்ததாகக் கூறினார், ஆனால் படம் குறித்த எதிர்மறையான PR இன்னும் நின்றபாடில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார். 






மேலும் ராதே ஷ்யாம், கங்குபாய் கத்தியவாடி, ஜக்ஜக் ஜீயோ மற்றும் 83 போன்ற படங்களின் பாக்ஸ் ஆபிஸ் தோல்வி குறித்த ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்த அவர் மேலும் கூறுகையில், “தாக்கட் தோல்வி அடைந்ததாக தினமும் பல செய்திகளைப் பார்க்கிறேன். ஆனால் இந்தப் படங்களும் தான் தோல்வி அடைந்தன. அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. ஏதேனும் குறிப்பிட்ட காரணம் உள்ளதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


அவரது இன்ஸ்டா பதிவுகளில் 8 படங்கள் தொடர்ந்து ப்ளாப் கொடுத்துள்ளார் கங்கனா என்றும் அவர் விளம்பரப் படங்களில் நடித்தால் அதுவும் ப்ளாப்பாகும் என்றும் சில விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.