பாலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ள கங்கனா ரனாவத் தன் நடிப்பைக் காட்டிலும் சர்ச்சைக் கருத்துகளுக்கே பெயர் போனவராக உள்ளார்.


நூபுர் சர்மாவுக்கு ஆதரவுக்குரல்


அந்த வகையில் முன்னதாக நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக் கருத்தைப் பதிவிட்ட நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார். 


“நுபுர் சர்மா தனது கருத்தைக் கூற உரிமை இருக்கிறது. அவருக்கு எத்தனை மிரட்டல்கள் வருகின்றன என்பதை நான் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். நீங்கள் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தால் நீதிமன்றம் செல்லுங்கள். இந்துக் கடவுள்கள் அவமதிக்கப்படுவதற்காக நாங்கள் அன்றாடம் நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருக்கிறோம்.




ஜனநாயக ஆட்சியில் இதை செய்யாதீர்கள்


நீங்களும் அதையே செய்யுங்கள். அதைவிடுத்து டான் ஆக முயற்சிக்காதீர்கள். இது ஒன்றும் ஆப்கானிஸ்தான் இல்லை. இங்கே, சீராக இயங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறது. அதை மறந்துவிட்டு பேசுபவர்களுக்கு இப்போது நினைவுபடுத்துகிறேன்" என கங்கனா அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.


நூபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் சர்ச்சைப் பேச்சுகளின் நாயகியான பாலிவுட் பிரபலம் கங்கனா ரனாவத். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இக்கருத்தை பதிவு செய்துள்ளார்.


நபிகள் நாயகம் குறித்து அவதூறு






முன்னதாக பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசியதாக புகார் எழுந்தது. தொடர்ந்து இது குறித்து பாஜவின் தலைமைக்கும் புகாராக அனுப்பப்பட்டு, இவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.


மேலும், காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா போன்ற கட்சியினர் அவர்மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். முன்னதாக நுபுர் சர்மாவின் கருத்துக்கு பாஜகவின்  நவீன்குமார் ஜிண்டாலும் ஆதரவான கருத்தினை டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.


இடைநீக்கம் செய்த பாஜக


இது மேலும் விவாதத்தினை அதிகப்படுத்திய நிலையில் பாஜக மேலிடம் முன்னதாக நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால்  இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்தது.


மேலும் இது குறித்துப் பேசியுள்ள பாஜக தலைமை, அனைத்து மதத்தவர்களின் நம்பிக்கைக்கு எதிரான கட்சி அல்ல. எந்த மத்தினைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மதப் பிரமுகராக இருந்தாலும் பாஜக அவர்களை மதிக்கும். அவர்களை அவமதிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் பாஜக ஆதரிப்பதோ ஊக்குவிப்பதோ இல்லை. எந்தவொரு மதத்தினையும் அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் சித்தாந்தத்துக்கு பாஜக எப்போதும் எதிராக உள்ளது” எனத் தெரிவித்திருந்தது.


இதனிடையே நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக களம் இறங்கிய கங்கனாவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.