மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தலைவி’ திரைப்படம் வருகின்ற 10 செப்டம்பர் அன்று திரையரங்கங்களில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ப்ரமோவுக்கான பிரஸ் மீட் சென்னை ஹயாட் ஹோட்டலில் நடந்தது. 






இதில் பேசிய நடிகை கங்கனா ரனாவத், ’படம் விரைவில் ரிலீசாகப் போகுது. நான் இன்னும் படத்தைப் பார்க்கலை. படத்துடைய தமிழ் வெர்ஷனை நான் இன்றைக்குப் பார்க்கப்போறேன். படத்தைப் புரிஞ்சுக்குறதுக்காக சில தமிழ் வார்த்தைகளையும் கத்துக்கிட்டு இருக்கேன். இந்த தருணத்தில் நான் எங்களது படக்குழுவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அரவிந்த்சாமி எப்போதுமே எனர்ஜியானவர். அவர்  மூலமாக ஜெயா அம்மாவைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன்.அதுவும் நிறைய காட்சிகளை அப்படியே நடித்துக்காட்டுவார், ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்பவும் கலகலப்பாக இருப்பார். அவரைப் போன்ற முக்கிய நடிகர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடித்தது எனக்குப் பெருமையாக இருந்தது, நிறைய கற்றுக்கொண்டேன். ஜிவி பிரகாஷின் இசை படத்தை வேறு லெவலுக்கு எடுத்துச் செல்லும். இது என்னுடைய கரியரில் மிக முக்கியமான படம்.அதனால் இந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். திறந்த கரங்களுடன் இந்தத்துறையில் என்னை வரவேற்ற உங்கள் அனைவருக்கும் நன்றி’ எனப் பேசியுள்ளார். 





முன்னதாக பிரஸ்மீட்டுக்காகத் தமிழ்நாடு வந்திருக்கும் கங்கனா இன்று காலை ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மெரினாவில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் அவர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். தொடக்கத்தில் தலைவி எனத் தமிழிலும் ஜெயா என தெலுங்கு மற்றும் இந்தியிலும் பெயரிடப்பட்டிருந்த இந்தத் திரைப்படம் பின்னர் மூன்று மொழிகளிலும் ‘தலைவி’ என்றே மாற்றப்பட்டது. மேலும் டிசம்பர் 2020ல் திரைப்படத்தின் வேலைகள் முழுவதுமாக முடிந்த நிலையில் ஏப்ரல் 2021ல் திரைப்படம் வெளியாகும் எனச் சொல்லப்பட்டது. பின்னர் தேதி அறிவிக்கப்படாமல் வெளியாகும் தேதி தள்ளிப்போடப்பட்டது. இந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. 50 சதவிகிதப் பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்கலாம் என்கிற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.