கிரேஸி மோகன் :


நடிகர் , நாடக இயக்குநர் , வசனகர்த்தா என பன்முக திறமை கொண்டவர் கிரேஸி மோகன். அடிப்படையில் பொறியாளரான  கிரேஸி மோகன், கலை மீது கொண்ட தீவிர காதல் காரணமாக அந்த துறையில் தன்னை முழுமையாக அர்பணித்துக்கொண்டார். எஸ். வி. சேகரின் நாடகமான "கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்" என்ற நாடகத்தின் மூலம் 1976இல் அறிமுகமானார் மோகன். அந்த நாடகம் பெறும் வரவேற்பை பெற்றதால் 'கிரேஸி' என்ற அடைமொழியுடன் 'கிரேஸி' மோகன் என்று அழைக்கப்பட்டார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு திடீர் மரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.






கமல்ஹாசனும் கிரேஸி மோகனும்!



அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, வசூல் ராஜா என ஏகப்பட்ட கமல் படங்களுக்கு வசனம் எழுதியவர் கிரேஸி மோகன். படங்களை தாண்டி கமல்ஹாசன் மற்றும் கிரேஸி மோகனுக்கு இடையிலான நட்பு திரையுலகம் அறிந்ததே ! .  கிரேஸி மோகனை திரையில் காமெடியனாக களமிறக்கியவர் கமல்ஹாசன்தான். 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கிரேஸி மோகன் நடித்துள்ளார். குறிப்பாக கமல்ஹாசனின் பஞ்ச தந்திரம் , மைகேல் மதன காமரஜார், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் , அவ்வை சண்முகி,  பம்மல் கே சம்பந்தம் உள்ளிட்ட படங்களில் இவரின் பங்களிப்பு அதிகம்.






கிரேஸி மோகனை திட்டிய கமல் :


கடந்த 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் , சரண் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.  மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளியான இந்த திரைப்படத்தில்  கிரேஸி மோகன் மார்கபந்து என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  அது நகைச்சுவை கதாபாத்திரமாக இருந்தாலும், கிளைமேக்ஸ் காட்சியில்  ஒரு செண்டிமெண்ட் காட்சியை வைத்திருந்தார் இயக்குநர் சரண். காமெடி காட்சிகளில் நடிக்கவே எனக்கு கூச்சமாக இருக்கும் சூழலில் நான் எப்படி இந்த சீரியஸ் காட்சியில் நடிப்பேன்..வேண்டாம் என இயக்குநரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.  ஆனாலும் அவரை சமாதானப்படுத்தி கிளைமேக்ஸ் காட்சியில் நடிக்க ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார் இயக்குநர். ஆனாலும்  கிரேஸி மோகனுக்கு அழுகையே வரவில்லையாம் . உடனே கமல் “ இப்போ அழ போறீங்களா  இல்லையா ?” என காட்டமாக தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு அந்த காட்சியை நடித்து முடித்தாராம் கிரேஸி மோகன்.