நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 'தமிழக வெற்றிக் கழகம்' என தனது தனி கட்சியைத் தொடங்கி வைத்தார். அதனைத் தெடர்ந்து அக்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சியின் கட்டமைப்பை விரிவுபடுத்த 2 கோடி உறுப்பினர்களை பிரத்யேக செயலி மூலம் சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. "தோழர்களாய் ஒன்றிணைவோம்" எனக் கூறி அக்கட்சியின் தலைவர் விஜய் உறுப்பினர்கள் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார். அந்த வகையில் செயலியை பயன்படுத்தி சுமார் 50 லட்சம் உறுப்பினர்கள் 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியில் சேர்ந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. 


 



தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகர் நாசரின் மகன் நூருல் ஹுசைன் ஃபைசல் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் உறுப்பினராக சேர்ந்துள்ளார் என்ற தகவலை நாசரின் மனைவி கமீலா போஸ்ட் மூலம் பகிர்ந்து இருந்தார்.  மகன் உறுப்பினராக இணைந்த அடையாள அட்டையை தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் நெகிழ்ச்சியுடன் போஸ்ட் செய்து இருந்தார்.  



இது குறித்து நடிகர் நாசரின் மனைவி கமீலா பேசி இருந்தார். ஃபைசல் சிறு வயது முதல் நடிகர் விஜய்யின் மிக பெரிய ஃபேன். 2014ல் சென்னை ஈ.சி.ஆர் சாலையில் ஏற்பட்ட விபத்தால் பலத்த காயம் ஏற்பட்டு மூளையின் செயல் திறன்கள் பாதிக்கப்பட்டது. அதனால் வீல்சேரில் முடங்கிப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. பெற்றோர்களையே மறந்த ஃபைசல் நினைவுகளில் விஜய் மட்டும் நிலைத்து இருந்துள்ளார். அவருக்கு பேச்சு பயிற்சி கொடுத்த சமயத்தில் விஜய் பெயரை உச்சரித்துள்ளார். வீட்டிற்கு சென்று விஜய் ஃபைசலை பார்த்து ஆறுதல் தெரிவித்து சென்றுள்ளார்.


 


 


நாசரின் மூத்த மகன் ஃபைசல் அந்த பெருந்துயரத்தில் இருந்து மீண்டு வந்து இருக்கிறார் என்றால் அதற்கு விஜய் ஒரு முக்கியமான காரணம் என நெகிழ்ச்சியுடன் கூறி இருந்தார் கமீலா. விஜய் புது கட்சி தொடங்கியது பற்றியும் அதில் உறுப்பினர் சேர்க்கைக்கு அழைப்பு விடப்பட்டது பற்றியும் ஃபைசலுக்கு தெரிய வந்ததும் அவர் உற்சாகத்துடன் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார். உடனே அவரின் விருப்பம் போல விஜய்யின் கட்சியில் உறுப்பினராக இணைந்துள்ளார் ஃபைசல். 


விஜய் அரசியலில் இறங்கியது குறித்து கமீலா பேசி இருந்தார். “தற்போது இருக்கும் அரசியல் சூழலில் ஒரு மாற்றம் வர வேண்டும். அந்த வகையில் விஜய் அரசியலுக்கு வந்தது வரவேற்கத்தக்க ஒரு விஷயம். அவர் முழுமையா அரசியலில் இறங்குவதற்கு முன்னரே சமூகம் மீது கொண்டுள்ள அக்கறையின் காரணமாக சி.ஏ.ஏ சட்டத்தை எதிர்த்து அறிக்கை விடுத்துள்ளார். அவரின் இந்த செயலை பலரும் விமர்சனம் செய்தாலும் அரசுக்கு அவர் கோரிக்கை வைக்கும் வகையில் அவரின் இந்த செயல் பாராட்டப்பட்ட வேண்டும். பல இளைஞர்களுக்கு விஜய் ஒரு முன்னோடியாக இருக்கிறார். எனவே அவரின் கட்சியில் மகன் இணைந்ததில் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார் கமீலா நாசர்.