ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் "செம்பி" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில்  நடிகர் அஸ்வின் இணையும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழா கோலாகலமாக நடைபெற்றது. 


 



உலகநாயகன் பேச்சு :


செம்பி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தலைமை தாங்கிய உலக நாயகன் சினிமா குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இப்படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் வெகு சிறப்பாக நடித்துள்ளனர். ஒரு படம் எப்படி பட்டது அது பெரிய படமா அல்லது சின்ன படமா என்பதை தீர்மானிப்பது அது காலங்களை கடந்தும் நம் மனதில் நிலைத்து இருக்கிறதா பேசப்படுகிறதா என்பதை பொறுத்து தான். 16 வயதினிலே திரைப்படம் இன்றும் பேசப்படுகிறது அது பெரிய படம். ஆனால் பல கோடிகளை செலவு செய்து எடுக்கப்படும் படங்களின் பெயர்கள் கூட இன்று நினைவில் இருப்பதில்லை. ஒரு படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் அதை மனதார பாராட்ட வேண்டும். அதுவே நன்றாக இல்லை  என்றாலும் அது எத்தனை பெரிய படமாக இருந்தாலும் தைரியத்துடன் நன்றாக இல்லை என்பதை சொல்ல தைரியம் வேண்டும். அது வெளிப்பட்டால் தான் சினிமா மேலும் வளரும். சில நல்ல  திறமையானவர்கள் ஆதரவு கிடைக்காததால் நம் கண் முன்னே அழிந்து போய் விடுகிறார்கள். அதனால் நல்ல திறமைகளை பாராட்ட தயக்கம் காட்டாதீர்கள். நடிகர் அஸ்வின் இப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். தம்பி ராமையாவின் நடிப்பும் அபாரம். லொகேஷன் மிகவும் அழகா இருந்தது. நல்ல  படத்தை நிச்சயம் ரசிகர்கள் வெற்றி படமாக ஆக்குவார்கள். செம்பி திரைப்படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் வாழ்த்துக்கள் என தனது உரையை முடித்து கொண்டார் நடிகர் கமல்ஹாசன்


 







பசுமையான லொகேஷன்:


நடிகர் அஸ்வின், கோவை சரளா, தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. இப்படத்தில் கோவை சரளா ஒரு 90 வயது பாட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபு சாலமன் படங்கள் என்றாலே அதன் சுற்றுசூழல் மிகவும் பசுமையாக கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும். அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யும் என நம்புகிறார்கள் ரசிகர்கள்.