மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் கண்மணி அன்போடு பாடலைக் கேட்டபோது புல்லரித்துப் போனதாக நடிகர் கமல்ஹாசன் பகிர்ந்ததாக அப்படத்தின் இயக்குநர் பகிர்ந்துள்ளார்.


மஞ்சுமெல் பாய்ஸ்


சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கிய மஞ்சுமெல் பாய்ஸ் மலையாள மொழியில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியானது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படத்தில் கமல்ஹாசனின் குணா படமும், அதில் இடம்பெற்ற கண்மணி அன்போடு பாடலும் மிகச்சிறப்பான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.


மலையாள ரசிகர்களைக் காட்டிலும் தமிழ் ரசிகர்களால் இப்படம் கொண்டாப்பட்டு வருகிறது. தற்போது இப்படக்குழுவை உலக நாயகன் கமல்ஹாசன் சந்தித்து பாராட்டியுள்ள நிகழ்வு படத்தை பட்டிதொட்டி எல்லாம் ட்ரெண்டாக வைத்துள்ளது. இப்படத்தை இயக்கிய சிதம்பரம் தான் ஒரு மிகத் தீவிரமான கமல் ரசிகர் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். தற்போது கமலை நேரில் சந்தித்தது குறித்த தனது அனுபவத்தைப் பற்றி அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். 


‘படம் பிடித்திருந்தது என்று சொன்னார்’


”கமல்ஹாசனை நேரில்  பார்த்தது என்னால் நம்ப முடியவில்லை. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் உண்மையான க்ளைமேக்ஸ் காட்சி இதுதான். குணா படம்  இல்லாமல், கமல்ஹாசன் இல்லாமல், மஞ்சுமெல் பாய்ஸ் படம் இல்லை. இதுதான் எனக்கு கிடைத்த உண்மையான வெற்றி. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்திற்கு எங்கள் ஊரை விட இங்கு தான் நல்ல ஆதரவு கிடைத்திருக்கிறது.


படம் பற்றி கமல் சார் நிறைய பேசினார். படம் மிகவும் நன்றாக இருப்பதாக சொன்னார். அவருக்கு பிடித்திருப்பதாக சொன்னதே பெரிய விஷயம். குணா படம் ஷூட் பண்ணது பற்றி நிறைய கேட்டுத் தெரிந்துகொண்டேன். மஞ்சுமெல் பாய்ஸ் படம் தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என நான் நினைக்கவில்லை. ஆனால் “கண்மணி அன்போடு காதலன்” பாடல் தமிழ் மக்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும். அதனால் நான் படத்தில் மீண்டும் பயன்படுத்தினேன். ஆனால் அந்த அளவுக்கு ரீச் கிடைக்கும் என நினைக்கவில்லை” என்று இயக்குநர் சிதம்பரம் கூறியுள்ளார்.


சிலித்துப்போன கமல்ஹாசன்






மேலும் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் கண்மணி அன்போடு பாடல் வரும்போது தனக்கும் புல்லரித்துவிட்டதாக நடிகர் கமல்ஹாசன் தன்னிடம் கூறியதாக இயக்குநர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.