லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை வெளியாகிறது. இதற்கான அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தத் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் ஃபகத் பாசில் , விஜய் சேதுபதி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். 






வளர்ந்துவரும் இளம் இயக்குநர்கள் பட்டியலில் தனக்கென தனியிடத்தை தக்கவைத்துக்கொண்டார் லோகேஷ். மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், தன்னுடைய யதார்த்தமான இயக்கத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் வெகு சுலபத்தில் ஈர்த்தார். மாநகரம் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான ’கைதி’யை இயக்கினார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது. பல ஆண்டுகளாக ரசிகனாக நடிகர் விஜயை ரசித்துவந்த லோகேஷ் ’மாஸ்டரை’ இயக்கி, கடந்த பொங்கலுக்கு வெளியிட்டார். இந்நிலையில் தனது திரையுலக பயணத்தில் அடுத்த மயில்கல்லாக கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கிவருகிறார். தேர்தல் முடிந்த கையோடு, கமல்ஹாசன் தற்பொழுது விக்ரம் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கிவிட்டார் என்பது தெரிந்த அப்டேட்தான். படத்தில் பகத்ஃபாசில் இணைகிறார் என்று ஒரு நிகழ்ச்சி பேட்டியில்  தெரிவித்திருந்தார் . ரசிகர்கள் இடையில் இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்தப் பரபரப்பின் தொடர்ச்சியாக விஜய் சேதுபதியும் படத்தில் இணைந்தார். மேலும் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் அங்கமாலி டைரிஸ் படத்தில் பெப்பேவாக தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர், அவரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். கொரோனா ஊரடங்கு தேர்தல் பரபரப்புக்களை அடுத்து தற்போது படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையேதான் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தின் உருவான கைதி கதை கேரளாவைச் சேர்ந்த ஒருவருடையது என அண்மையில் சர்ச்சை உண்டானது குறிப்பிடத்தக்கது. கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் “கைதி”. இந்த படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதி அதனை இயக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். படத்தை தயாரித்திருந்தார்  எஸ்.ஆர்.பிரபு. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை படமாக்க லோகேஷ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் முதல் பாகத்தில் வெளியான கதை என்னுடையது என கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், அம்மாநில நீதிமன்றம் இரண்டாம் பாகம் எடுக்க தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. லோகேஷ் கனகராஜூக்கு ஆதரவாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு உட்பட பலரும் ட்வீட் செய்திருந்தனர். இதற்கிடையேதான் தனது ’விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாவதாக லோகேஷ் கனகராஜ் தற்போது அறிவித்துள்ளார்.