வேட்டையாடு விளையாடு


கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான படம் வேட்டையாடு விளையாடு. கமல்ஹாசன், ஜோதிகா, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி, அபிராமி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்தார். செவந்த் சேனல் கம்யுனிகேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் இந்தப் படத்தை தயாரித்திருந்தார். விஜய் நடித்த மாண்புமிகு மாணவன், சரத்குமார் நடித்த கூலி, வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார் மாணிக்கம் நாராயணன்.


டப்பிங் பேச மறுத்த கமல்


கெளதம் மேனன் இயக்கத்தில் கமல் முற்றிலும் புதிய கண்ணோட்டத்தில் நடித்த படம் வேட்டையாடு விளையாடு. இப்படத்தில் நடித்தபோது கெளதம் மேனன் தன்னை வைத்து என்ன படம் எடுக்கிறார் என்பது முன்பு கமலுக்கு புரியவில்லை என்றும், படம் முழுவதுமாக உருவானபோது தான் கமலுக்கு படம் பிடித்தது என்றும் கெளதம் மேனனே தெரிவித்திருந்தார்.


கடந்த ஆண்டோடு வேட்டையாடு விளையாடு படம் வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு இப்படம் திரையரங்கில் ரீரிலீஸ் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் திரையரங்கில் இப்படம் ஓடி நல்ல வசூலை ஈட்டித் தந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தற்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.






அவர் தெரிவித்ததாவது “வேட்டையாடு விளையாடு படத்தின்போது சம்பளத் தொகை மீதமிருந்ததால் நடிகர் கமல்ஹாசன் படத்துக்கு டப்பிங் பேச மறுத்துவிட்டார். கெளதம் மேனனின் உதவி இயக்குநர்கள் எல்லாம் அவரிடம் சென்று பேசிப் பார்த்தும் அவர் சம்மதிக்கவில்லை.


பின் நான் இரண்டு செக் எடுத்துக் கொண்டு போய் அவரிடம் கொடுத்து டப்பிங் பேசும்படி சொன்னேன். அதற்கு பிறகு அவர் சம்மதித்தார். படம் வெளியானபோது நாங்கள் யாருக்கும் படத்தை போட்டுக் காட்டவில்லை. கமல் சார் படத்தின் காப்பியை கேட்பதற்கு தயக்கப்பட்டு கடைசி வரை காப்பியே வாங்கவில்லை, ரஜினி சார் மட்டும் படம் பார்க்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.


அவருக்காக திரையிடலை ஏற்பாடு செய்திருந்தோம். ரஜினி நான் வராமல் படம் பார்க்க மாட்டேன் என்று காத்திருந்தார். பின் நான் சென்றதும் படம் பார்த்துவிட்டு என் தலையை வருடினார். வேட்டையாடு விளையாடு படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றது.” என்று அவர் கூறியுள்ளார்