கேரளா மாநிலத்தின் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது 'கேரளீயம் 2023' (Keraleeyam 2023) நிகழ்ச்சி. திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி நவம்பர் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கேரளா மாநிலத்தின் முன்னேற்றங்கள், சாதனைகள், கலாச்சாரம், பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக நடைபெற உள்ளது. 


 




ஒரு வாரம் நடைபெற இருக்கும் இந்த விழாவை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார். மேலும் இந்த விழாவில் பல அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலகின் ஆண்டவன் உலகநாயகன் கமல்ஹாசன் கலந்து கொள்ள, மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் மூவரும் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் மூவரும் ஒன்று போல பாரம்பரிய உடையான வெள்ளை வேஷ்டி சட்டையில் அமர்ந்து இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி மிக வேகமாக பரவி வருகிறது.


கமல், மம்மூட்டி, மோகன்லால் என மூன்று ஸ்டார் நடிகர்களையும் ஒரே மேடையில் ஒன்றாக பார்ப்பது அவர்களின் ரசிகர்களுக்கு பேரானந்தத்தை கொடுத்துள்ளது. இந்த போட்டோ சோசியல் மீடியாவில் அசுர வேகத்தில் வைரலாகி வருகிறது. திரை உலகை தாண்டியும் மூவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகைகள் மஞ்சு வாரியர், ஷோபனா உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். 


 



கல்கி, இந்தியன் 2 உள்ளிட்ட மெகா பட்ஜெட் படங்களில் நடித்துள்ள உலகநாயகன் கமல்ஹாசன் அதையே தொடர்ந்து மணிரத்னம் மற்றும் ஹெச். வினோத் இயக்கும் படங்களில் அடுத்து நடிக்க உள்ளார். அதே சமயத்தில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியையும் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் வெளியாகியுள்ள இந்த ட்ரியோ புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்கள் மூவரும் ஒரு படத்தில் இணைந்தால் எப்படி இருக்கும் என அவர்களின் ஆசைகளுக்கு இறக்கை வைத்து பறக்க விட்டு வருகிறார்கள். 


இந்த 'கேரளீயம் 2023' நிகழ்ச்சியில் கருத்தரங்குகள், கண்காட்சி, உணவு திருவிழா என பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையில் ஒரு வார காலத்திற்கு இந்த திருவிழா நடைபெறும்.


இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், வளர்ந்த நாடுகளின் தரத்திற்கு கேரளா எப்படி தன்னை உயர்த்திக்கொள்ள முன்னேற்பாடுகளை செய்து வருகிறது, அதற்கு கேரள அரசு எடுத்து வைத்துள்ள முன்னேற்பாடுகள் போன்றவைக்கு இந்த கேரளீயம் 2023 நிகழ்ச்சி ஒரு புது உத்வேகத்தை கொடுக்கும் என பேசி இருந்தார்.