தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரும் டோலிவுட் சினிமாவின் முன்னணி ஸ்டார் நடிகருமான மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா, கடந்த ஆண்டு நவம்பர்  மாதம் 15ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இவர் ஒரு சிறந்த நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் ஒரு அழுத்தமான முத்திரையை பதித்தவர். 


 



நினைவு தினம் :


கடந்த ஐம்பது  ஆண்டு காலமாக திரைத்துறையில் நடிகர் கிருஷ்ணாவின் பயணம் சிறப்பானதாக இருந்தது. 350க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் கிருஷ்ணாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் ஓரிரு நாட்களில் வர உள்ளதால் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் அவரின் திருவுருவச் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 


மரியாதை செய்த கமல்ஹாசன் :


நடிகர் கிருஷ்ணாவின் திருவுருவச் சிலையை நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்து சிறப்பித்தார். படப்பிடிப்பிற்காக சென்ற போது அங்கே நடைபெற்ற மகாகலைஞனின் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இது நடிகர் கிருஷ்ணாவுக்கும் - நடிகர் கமல்ஹாசனுக்கு இடையே இருக்கும் பிணைப்பை காட்டுகிறது. 


 



மேலும் இந்த திறப்பு விழாவில் ஆந்திராவின் முக்கிய இளைஞரணித் தலைவர் தேவிநேனி அவினாஷும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். இந்த விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு நடிகர் கிருஷ்ணாவின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினர். 


நன்றி சொன்ன மகேஷ் பாபு :


நடிகர் மகேஷ் பாபு தனது தந்தையின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செய்த நடிகர் கமல்ஹாசன் மற்றும் தேவிநேனி அவினாஷ் ஆகியோருக்கு தனது மனமார்ந்த நன்றியை எக்ஸ் தள பக்கம் மூலம் தெரிவித்துக் கொண்டார். படப்பிடிப்பு காரணமாக அவரால் நேரில் கலந்து கொள்ள முடியாமல் போனது.



வெள்ளித்திரையை தாண்டியும் நடிகர் கிருஷ்ணாவின் செல்வாக்கு ஆந்திர மக்கள் மத்தியில் மிகுதியாக இருப்பதால் ரசிகர்களின் கூட்டம் அலை மோதியது. இது அவர் மேல் மக்களுக்கு இன்றும் இருக்கும் மரியாதையை எடுத்து காட்டுகிறது.