பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கியுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 


கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.   


மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி வசூலில் மாபெரும் சாதனைப் படைத்துள்ளது. இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் சென்னை பீனிக்ஸ் மாலில் உள்ள திரையரங்கில் பார்த்தார். அவருடன் நடிகர்கள் விக்ரம், கார்த்தி இருவரும் இணைந்து படம் பார்த்தனர். 






பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல், பொன்னியின் செல்வன் போன்ற ஒரு பிரம்மாண்ட படைப்பை உருவாக்கியதற்காக படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார். பின் ஒரு ரசிகனாக இந்த திரைப்படத்தை பார்க்கும் போது ஏற்பட்ட பிரமிப்பு கண்டிப்பாக அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும் என நான் நம்புகிறேன். இந்த படத்தின் தொடக்கத்தில் பொற்காலத்தைப் பற்றிய ஒரு வசனம் என்னுடைய குரலில் இடம்பெறும்.


படத்தை பார்த்த மகிழ்ச்சியில் சொல்கிறேன். தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது போன்றது உணர்வு எனக்குள் ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமா கலைஞராக, தயாரிப்பாளராக எனக்கு இது பெருமிதம் கொள்ளும் நேரமாகவும் உள்ளது. பொன்னியின் செல்வனில் நான் நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் தம்பி கார்த்தி நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் பல வேடங்களில் நானே நடிக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன்.


போர்க்கள காட்சிகளை படமாக்குவது எத்தனை கடினம் என்பது எமக்குத் தெரியும். கத்தி, கேடயம், கவசம், கிரீடம், குதிரை, புழுதி இதனுடன் நடிப்பு என எல்லாவற்றையும் நன்றாக செய்ய வேண்டும். இவை எல்லாவற்றையும் சீயான் விக்ரம் மிக நன்றாக செய்திருக்கிறார். இந்த புத்துணர்ச்சி நீடிக்க வேண்டும். இந்த உணர்வும், கூட்டுறவும் நீடிக்க வேண்டும். நாளை என்னுடைய படத்திற்கும் நீங்கள் இதுபோல் கொண்டாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.