கமல்ஹாசன் , அர்ஜுன் நடித்து  1995 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் குருதிப் புனல். ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இன்றுடன் 28 ஆண்டுகளை கடந்துள்ளது குருதிப் புனல் திரைப்படம். குருதிப் புனல் படத்தை பற்றிய சில அறியத் தகவல்களைப் பார்க்கலாம்.


1995 ஆம் ஆண்டு வெளியான குருதிப் புனல் திரைப்படம் வழக்கமான கமர்ஷியல் படங்களைப் போல் இல்லாமல் மாறுபட்ட ஒரு முயற்சியாக இருந்தது. இந்தப் படத்தில் ஒரு பாடல் கூட இல்லாதபோது இவ்வளவு பெரிய வெற்றியடைந்ததைப் பார்த்து அன்றையத் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். சுமார் ரூ 5 கோடி பட்ஜட்டில் எடுக்கப் பட்ட இந்தப் படம் திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடி மொத்தம்  20 கோடி வசூல் செய்தது. இந்தப் படத்தின் வெற்றியை பார்த்து இதே மாதிரியானப் படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வந்தனர்.


இந்தப் படத்தில் கமல் அடிவாங்கி முகமெல்லாம் காயங்களுடன் இருக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த காட்சிக்கு மேக்கப் போட வெளிநாடுகளில் இருந்து ஒப்பனை கலைஞர்கள் வரவழைக்கப் பட்டார்கள்.


இந்தியில் கோவிந்த் நிஹாலனி இயக்கத்தில் வெளியான த்ரோகால் படத்தில் தமிழ் ரீமேக் குருதிப் புனல். ஒரே  நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்குவில் எடுக்கப் பட்டது. இந்தப் படத்தின் தமிழ் பிரதியைப் பார்த்த இந்தி இயக்குநர் கோவிந்த் நிஹாலனி தன்னை விட இந்தப் படத்தை கமல் சிறப்பாக எடுத்துள்ளதாக பாராட்டியுள்ளார்.


கமலின் முந்தியப் படங்களான நம்மவர் மற்றும் 2001 ஆம் ஆண்டு வெளியான ஆளவந்தான் ஆகிய படங்களுக்கு இசையமைத்த மகேஷ் மகாதேவன் இந்தப் படத்திற்கு இசையமைத்தார். இவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு 2002 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.


வசூல் ரீதியாக மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் குருதிப் புனல் பாராட்டப் பட்டது. பத்திரிகைகளில் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக இந்தப் படத்தை விமர்சகர்கள் குறிப்பிட்டார்கள்.


68 ஆவது ஆஸ்கர் விருது இந்தியா சார்பாக சிறந்த அயல் மொழித் திரைப்படத்திற்கான விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டது குருதிப் புனல் திரைப்படம். 


இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் கமல் அர்ஜுனை நடிக்க அழைத்தபோது படத்தின் கதையை கூட கேட்காமல் படத்தில் அர்ஜுன் நடிக்க சம்மதித்துள்ளார்.


இந்தியாவில் முதல் முறையாக டால்பி சரெளண்ட் ஒலியமைப்பில் உருவாக்கப்பட்ட படம் குருதிப்புனல். இந்த ஒலியமைப்பில் ஹாலிவுட்டில் உருவான பேட்மேன் ரிடர்ன்ஸ் படம் வெளியாகிய இரண்டே வருடங்களில் இந்தியாவில் குருதிப் புனல் வெளியானது குறிப்பிடத் தக்கது.


செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டைப் படத்தின் ஒளிப்பதிவாளரான அரவிந்த் கிஷன் இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார்.


மேலும் படத்தில் நடித்திருந்த நடிகர் ஜான் எடதட்டில் கதாபாத்திரத்திற்கு சியான் விகரம் குரல் கொடுத்திருந்தார்.  நடிகை கெளதமிக்கு நடிகை ரோகினி குரல் கொடுத்தார்.


குருதிப் புனல் மாதிரியான ஒரு கமர்ஷியல் அல்லாத தீவிரமான படத்தில் நடிப்பதற்கு கமல் ஒரு ஃபார்முலாவை அன்று கடைபிடித்து வந்தார். முதலில் மகாநதி படம் வெளியானது இதனைத் தொடர்ந்து கமர்ஷியல் படமான மகளிர் மட்டும் படத்தில் நடித்தார். பின் நம்மவர் மற்றும் சதிலீலாவது உள்ளிட்டப் படங்களில் நடித்தப் பின்னர் குருதிப் புனல் படத்தில் நடித்தார் கமல்