கல்கி 2898 AD


பிரபாஸ் நடித்து நாக் அஸ்வின் இயக்கியுள்ள கல்கி படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி , அனா பென், ராஜமெளலி, துல்கர் சல்மான், ஷோபனா, பசுபதி, பிரம்மானந்தம், விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர்  உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாரயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 


சுப்ரீம் யாஸ்கின் கதாபாத்திரத்தில் கமல்




கல்கி படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் சுப்ரீம் யாஸ்கின் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான நாள் முதல் கமலின் கதாபாத்திரம் குறித்த பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வருகின்றன. மொட்டையடித்த கமலின் கெட்-அப்  சமூக வலைதளத்தில் வைரலானது. தற்போது படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், கமலின் கதாபாத்திரத்தை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். கமல் நடித்துள்ள சுப்ரீம் யாஸ்கின் கதாபாத்திரத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் இந்த கதாபாத்திரத்தை கமல் எப்படி நடித்துள்ளார் என்பதைப் பார்க்கலாம்!


கமல்ஹாசன் தந்த சர்ப்ரைஸ்! 


மகாபாரதப் போர் முடிந்து 6000 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் கதை கல்கி. ஒட்டுமொத்த உலகத்தின் செல்வங்களும் சுரண்டப்பட்டு கடைசியாக வாழ்வதற்கு கொஞ்சம் நம்பிக்கை இருக்கும் இடமாக காசி மட்டுமே இருக்கிறது. பல நகரங்களில் இருந்து பிழைக்கும் நம்பிக்கை மக்கள் காசிக்கு வருகிறார்கள். புனித ஆறாகக் கருதப்படும் கங்கை வற்றி நிலம் பிளந்து கிடக்கிறது. குடிக்கத் தண்ணீர் இல்லாம பஞ்சத்திலும் பசியிலும் மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ஆட்சி செய்கிறார் 200 வயது கிழவனான சுப்ரீம் யாஸ்கின்  (கமல்ஹாசன்). கருத்தரிக்கும் சாத்தியம் கொண்ட பெண்களை மட்டும் கூட்டிச் சென்று அவர்களின் மேல் பிராஜெக்ட் கே என்கிற பரிசோதனை முயற்சி ஒன்றை செய்கிறார்கள். இந்த பிராஜெக்ட் கே என்பது என்ன என்பதை தெரிந்துகொள்ள நாம் இரண்டாம் பாகம் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.


எல்லா வில்லனுக்கும் அவனுக்கென்று ஒரு கொள்கை இருக்கும். அப்படி இப்படத்தில் கமலுக்கு ஒரு கொள்கை இருக்கிறது. அதாவது மனிதர்கள் எல்லாவிதங்களிலும் பூமியின் வளத்தை சுரண்டுகிறார்கள். தங்களுடைய சுய லாபத்திற்காக அவர்கள் பூமிக்கு அழிவையே ஏற்படுத்துகிறார்கள். இதனால் ஒட்டுமொத்த பூமியையும் தான் ஆசைப்பட்ட வகையில் மாற்றியமைக்க முடிவு செய்கிறார் யாஸ்கின். தனது பிராஜெக்ட் கே மூலம் அவர் ஒரு புது உலகத்தை படைக்கத் திட்டமிடுகிறார்.


கமலின் நடிப்பு






கமலின் தோற்றம் என்பது பெரும்பாலும் அவரது தலையே. ஆனால் தனது குரல் மற்றும் கண்களை வைத்தே தனது கதாபாத்திரத்திற்கு தேவையான மிரட்சியை ஏற்படுத்தி விடுகிறார் கமல். இடம் வலம் என துளிக்கூட அசையாமல் ஒரே இடத்தில் அவரது கண்கள் நிலைத்திருத்தப் பட்டிருக்கின்றன. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம்  என எல்லா மொழிகளிலும் தனது கதாபாத்திரத்திற்கு தானே டப்பிங் பேசியிருக்கிறார் கமல். ஆனால் ஒவ்வொரு மொழிக்கு ஏற்ற வகையில் தனது குரலில் கமல் செய்திருக்கும் மாற்றத்தை கவனிக்கவே எல்லா மொழியிலும் படத்தைப் பார்க்கலாம். 


முதல் பாகத்தின் இறுதியில் கமலின் கதாபாத்திரம் வலுப்பெறுகிறது. கல்கி இரண்டாம் பாகத்தில் கமலுக்கு இன்னும் நிறைய காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்!