1978 ஆம் ஆண்டு ருத்ரையா என்பவர் அவள் அப்படித்தான் என்று ஒரு படத்தை இயக்கினார். அதில் ரஜினி , கமல் மற்றும் ஸ்ரீபிரியா நடித்திருந்தார்கள். இந்த தகவல் தெரிந்தவர்கள் கையை உயர்த்துங்கள்.

இப்போது இந்தப் படத்தை பார்த்தவர்கள் கையை உயர்த்துங்கள். இந்த மூன்றுக்கும் கையை உயர்த்தாதவர்கள் இந்த சின்ன கட்டுரையை படியுங்கள். ஏனென்றால் அவள் அப்படித்தான் படம் வெளியாகி இன்றுடன் 45 ஆண்டுகள் கடந்துள்ளன. ஒரு நேர்மையான படைப்பாளியாக இருக்க முயன்ற ஒருவரை கெளரவிப்பது என்பது அவரது படைப்பைப் பற்றி பேசுவது தான்.


பெண் கதாபாத்திரங்களும் இயக்குநர்களும்



தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரங்களை ஏதாவது ஒரு வகையில் புதுமையாக எழுத இயக்குநர்கள் பொதுவாக முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். உலகம் முழுவதும் இந்தப் போக்கு இருந்திருக்கிறது. எழுத்தாளர் தாஸ்தயெவ்ஸ்கி எழுதிய வெண்ணிற இரவுகள் படத்தில் வரும் நாஸ்தென்காவை பெரும்பாலான இயக்குநர்கள் கற்பனையில் காதலித்திருப்பார்கள். அப்படி தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரங்களை சிறப்பாக எழுதுபவர்கள் என்று இயக்குனர் பாலச் சந்திரன், பாலுமகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா, வசந்த், செல்வராகவன், கெளதம் மேனன் (விண்ணைத்தாண்டி வருவாயா) என்று ஒரு வரிசை சொல்லலாம். இன்றையத் தலைமுறையைக் காட்டிலும் முந்தையத் தலைமுறை இயக்குநர்கள் பெண்களை இன்னும் அதிகமாக உணர்வுப் பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் அணுக முயற்சித்திருக்கிறார்கள். இந்த வரிசையில் ருத்ரையாவிற்கு இன்னும் அழுத்தமான ஒரு இடம் இருக்கிறது. அதற்கு காரணம் அவள் அப்படிதான் படம்.


ருத்ரையா என்கிற சினிமா காதலர்





தனது கல்லூரி காலங்களில் இருந்தே உலக சினிமாக்களை விரும்பி பார்த்து அந்தப் படங்களை தனது சக நண்பர்களுடன் ஒரு படத்தை நுணுக்கமாக சிலாகித்து பேசும் ஒருவராக தான் ருத்ரையா இருந்திருக்கிறார். பொதுவாகவே எல்லா மனிதன் அல்லது மிருக கூட்டத்தில் ஒன்று மட்டும் தனித்து நடக்க விரும்பும் இல்லையா அப்படியான ஒருவராக தான் தனது நண்பர்களுக்கு இருந்திருக்கிறார் ருத்ரையா.


சினிமா மீது இவ்வளவு ஆர்வம் வைத்திருந்த ருத்ரையா சென்னையில் வந்து திரைப்பட கல்லூரியில் சேர்ந்து திரைப்பட உருவாக்கத்தை கற்றுக் கொள்கிறார். ருத்ரையா திரைத்துறைக்கு வரும்போது பாலச்சந்திரன் , மகேந்திரன், பாரதிராஜா போன்ற இயக்குநர்கள் தங்களுடைய பெண் கதாபாத்திரங்களால் மக்களின் மனதில் இடம்பிடித்திருந்தார்கள். ருத்ரையா பெண்ணைப் பற்றிய தன்னுடைய சித்திரத்தை தன் கேள்விகளில் இருந்து அவள் அப்படித்தான் கதையை உருவாக்குகிறார். இதில் எழுத்தாளர் வண்ணநிலவனுடைய பங்கும் அதிகம் இருக்கிறது.

இந்தப் படத்தின் கதையை கமலிடம் சொல்கிறார் ருத்ரையா. எப்படி இது ஒரு தனி விலங்கோ அப்படி கமல் ஒரு தனி விலங்கு இல்லையா. கமல் இந்தக் கதையில் தானே நடிப்பதாக கூறுகிறார். பிறகு ரஜினியிடம் பேசி அவரையும் நடிக்க வைக்கிறார். ருத்ரையாவை இளையராஜாவிடம் அழைத்துச் செல்கிறார் கமல்ஹாசன். அவள் அப்படித்தான் என்கிற படம் 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகி அடுத்த சில நாட்களில் கூட்டமில்லாமல் படம் திரையரங்கத்தில் இருந்து நீக்கப்படுகிறது.


அவள் அப்படித்தான்





இன்று இளம் இயக்குநர்கள் , சினிமாவிற்குள் தீவிர மனநிலையுடன் வருபவர்கள் அவள் அப்படித்தான் படத்தை பார்க்காமல் வந்திருக்க வாய்ப்புகள் குறைவு. அன்று மக்களால் மறுக்கப்பட்ட ஒரு படம் 45 ஆண்டுகளுக்குப் பிறகு ஏன் மக்களால் பேசப்பட வேண்டும். அப்போது மக்கள் மாற்றத்திற்கு தயாராகவில்லையா. நிஜமாகவே அந்தப் படத்தில் மக்களை கவர்ந்த எதுவும் இல்லையா.


மூன்று ஆண்களும் பெண்ணும்



படத்தில் மொத்தம் நான்கு கதாபாத்திரங்கள் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். அருண் (கமல்ஹாசன்), அருணின் நண்பன் தியாகு ( ரஜினிகாந்த் ) மஞ்சு (ஸ்ரீரிபிரியா), மனோ ( சிவச்சந்திரன்). பெண்களைப் பற்றிய ஒரு ஆவணப்படத்தை இயக்குகிறான் அருண். ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளியாக இருக்கிறார் தியாகு, அவரது கம்பெனியில் வேலை செய்பவராக இருக்கிறார் மஞ்சு.கதை என்று இல்லாமல் இந்தப் மூன்று கதாபாத்திரங்களுக்கு இடையில் அவர்கள் பேசிக் கொள்ளும் சூழல்களை மட்டும் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர்.


இந்தப் படத்தில் வரும் மூன்று ஆண்களும் பெண்களைப் பற்றிய தங்களுடைய ஒரு வரையறை வைத்திருப்பவர்கள்.


 தியாகு (ரஜினி)




பெண்களை நுகரக்கூடிய ஒரு பொருளாக மட்டுமே பார்க்கும் எண்ணம் கொண்டவன் தியாகு . இயல்பாகவே பெண்களிடம் ஈர்க்கப்படும் ரஜினியின் தியாகு கேரக்டர் சிறிது பார்ப்பதற்கு வில்லன் சாயல் கொடுத்தாலும் எந்த வகையிலும் அந்த கதாபாத்திரத்தை கெட்டவனாக காட்ட இயக்குநர் முயற்சிக்கவில்லை. பெண்களை நுகர்வுப் பொருட்களாக பார்க்கும் அதே நபர் , பெண்களை உயர்வாக மதிக்கும் சில இடங்களையும் சொல்கிறார். மஞ்சுவால் ஈர்க்கப்படும் அவர் முதலில் அவளை இம்ப்ரஸ் பன்ன முயற்சி செய்கிறார். பின் தன்னை வெளிப்படுத்துகிறார். ஒரு கட்டத்திற்குமேல் அவளிடம் தகாத முறையில் கூட நெருங்க முயற்சிக்கிறார். அந்த இடத்தில் மஞ்சுவிடம் தன் வாழ்க்கையில் முதல் முறையாக அவமானப்படுகிறார். பெண்கள் என்றால் இவ்வளவுதான் என்று நினைத்த தியாகுவின் மனதின் உறுதிக்கு முதல் அடி மஞ்சுதான் கொடுக்கிறார்.


அருண் (கமல்)




பெண்கள் புதிரானவர்களாக அந்நியப்பட்டவர்களாக உணர்பவராக இருக்கிறார் அருண்.  அவர்களை அறிவுப்பூர்வமான ஒரு வரையறைக்குள் புரிந்துகொள்ள  நினைக்கிறார். அதன்  முயற்சியாக தான் அவர் அந்த ஆவணப்படம் எடுக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் கமல் தனது உடல்மொழி , குரல் என எல்லா விதத்திலும் தன்னை மென்மையான ஒருவராக வெளிப்படுத்தி இருப்பார்.


மனோ


மூன்றாவது ஆணாக வரும் மனோ தன்னுடைய தேவைக்காக பெண் அவள் பலவீனமானவளாக இருக்கும் போது அவளைப் பயன்படுத்தி ஏமாற்றுகிறான்.


அருண் -  மஞ்சு




இந்த மூன்று ஆண்களில் மஞ்சுவால் அதிகம் சிரமப் படுவது கமல் நடித்த அருண் தான். காரணம் மற்ற இருவரும் பெண்களை புரிந்துகொள்ளவே முயற்சிக்கவில்லை. மஞ்சுவும் அருணும் சந்தித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு இடையில் எப்போதும் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன ஆனால் அதே நேரத்தில் இருவருக்கும் இடையில் நெருக்கமும் அவ்வப்போது வெளிப்படுகிறது. இயல்பாகவே மஞ்சுவும் அருணும் ஒருவர் மேல் ஒருவர் ஈர்க்கப் படுகிறார்கள். அதை முடிந்த அளவு அவர்கள் தவிர்க்கவும் செய்கிறார்கள். .

அருண் மற்றும் மஞ்சுவிற்கு இடையிலான உறவு நமக்கு இன்னும் சிக்கலானதாக தெரிகிறது. அருண் தன் மனசாட்சிப் படி எவ்வளவு நேர்மையான ஒருவனாக நடந்துகொண்டாலும் மஞ்சு அவனிடம் ஏதொவொரு தவறை சுட்டிக்காட்டுகிறாள். பெண்களை புரிந்துகொள்ளும் ஒரு முயற்சியில் இருக்கும் அருண் மஞ்சு தன்னைப் பற்றி சொல்வது எல்லாம் உண்மையாக இருக்கலாம் என்று தன்னையே கூட சில நேரங்களில் கேட்டுக் கொள்கிறார். ஆனால் மஞ்சு தன்னை தவறாக புரிந்துகொள்கிறார் என்கிற பதட்டம் படம் முழுவதும் கமல் நடிப்பில் இருந்துகொண்டே இருக்கும். ஒரு கட்டத்திற்கு மேல் மஞ்சுவை எதிர்த்தும் பேச தொடங்குகிறார் அருண். மஞ்சு உணர்ச்சிகளை ஒதுக்கி அறிவுப்பூர்வமாக நடந்துகொள்ள முயற்சிக்கிறார் என்பதை அடிக்கடி உணர்த்திக் கொண்டே இருக்கின்றன அருண் பேசும் வசனங்கள்.


தியாகு - அருண்




 நல்ல  நண்பர்களாக இருந்தாலும் தியாகும் அருணும் பெண்களைப் பற்றிய விவாதங்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளவர்களாக இருக்கிறார்கள். பெண்கள் பற்றிய தியாகுவின் கருத்துக்கள் சில நேரம் அருணை கோபப்படுத்தவதாகவும் இருக்கிறது. ஆனால் தன்னை எந்த விதத்திலும் மறைத்துக் கொள்வதில்லை தியாகு. எந்த வித ஒளிவு மறைவும் இல்லாமல் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார் தியாகு. 


மஞ்சு




ஆனால் மஞ்சு ஏன் இப்படி புரிந்துகொள்ள முடியாதவளாக இருக்கிறார். மஞ்சுவின் கடந்தகாலத்தில் அவர் மனோ என்கிற ஒருவரை காதலிக்கிறார்.  மஞ்சுவின் பாலியப் பருவம் கசப்பானது. மனோவிடம் தன்னுடைய கடந்த காலம் தன்னுடைய தந்தையைப் பற்றி மனம் பகிர்ந்து கொள்கிறார் மஞ்சு. வாழ்க்கையில் உள்ள எல்லா கஷ்டங்களையும் கேட்ட ஒருவருடன் உடலுறவு வைத்துக் கொள்கிறார். இன்று இளையராஜா இசையமைத்த உறவுகள் தொடர்கதை பாடல் பெரும்பாலானவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் ஒரு பாடலாக இருக்கிறது.


ஆனால் படத்தில் மஞ்சுவுடன் உடலுறவு வைத்துக்கொள்வதற்கு முன் இந்தப் பாடலை மனோ பாடுவார். அந்த கூடலுக்குப் பின் அவர் மஞ்சுவிடம் தனது சுயரூபத்தை காட்டுவார். இந்தப் பாடலை படக்குழு தெரிந்து வைத்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் இப்படி ஆறுதல் அளிக்கும் ஒரு பாடலை பாடியப்பின் தான் மஞ்சு மனோவால் ஏமாற்றப்படுகிறார். 


தன்னுடைய உணர்ச்சிகளுக்காக பலவீனமாக்கப் பட்ட மஞ்சு  ஆண்களை சந்தேகக் கண்களால் மட்டுமே பார்ப்பதை  நம்மால் அவளது ப்ளாஷ்பேக் கேட்டப் பின்  புரிந்துகொள்ள முடியும். அருணிடம் அவர் விட்டுக் கொடுக்காமல்  கடுமையாக இருப்பதற்கு காரணம் தன்னை ஏமாற்றிய ஒருவனை மாதிரியே அருண் நேர்மையானவனாக இருப்பதால் தான். ஏமாற்றத்தின் அனுபவம், பல்வீனமாக இல்லாமல் உறுதியாக இருக்க வேண்டிய கட்டாயம் மஞ்சுவுக்கு இருக்கிறது. அதை எல்லாம் அருண் முன்பு இழக்கிறார் மஞ்சு ஆனால் அதற்காக தன்னையே கோபித்தும் கொள்கிறார். படத்தின் கடைசிவரை அருணால் மஞ்சுவை புரிந்துகொள்ள முடிவதில்லை. அவன் சரியாக புரிந்துகொண்டாலும் அப்படி இல்லை என்று மஞ்சு அவனை மறுத்து  பேசுகிறார். பல யோசனைகளுக்குப் பிறகு மீண்டும்  ஒரு ஆணுக்கு தன் வாழ்க்கையில் வாய்பளிக்க மஞ்சு நினைக்கும் போது காலம் கடந்துவிடுகிறது .



மஞ்சு பற்றிய அருணின் கேள்விகள் அப்படியே நீள்கின்றன. அதற்கு என்ன அர்த்தம் கொடுக்க என்று தெரியாமல் தவிக்கிறார் அருண். அவள் அப்படித்தான் என்று பதில் சொல்கிறார் ருத்ரையா.


உயர்த்திய கையை கீழே போடுங்கள்

இன்று பெண் மைய படங்கள் அதிகம் வருவதாக நாம் சொல்கிறோம். இதில் ஆண்கள் இயக்கும் படங்களே அதிகம். அதில் எத்தனைப் படங்களில் பெண் என்கிற எதிர்பாலினத்தோடு உரையாடும் ,முயற்சியாக  கதாபாத்திரங்கள் உருவாக்கப் படுகின்றன. சமீபத்தில் அதிகம் பேசப்பட்ட ஒரு கதாபாத்திரம் என்றால் கெளதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஜெஸ்ஸி கதாபாத்திரத்தை சொல்லலாம். ஆனால் ஒவ்வொரு ஆணின் மனதில் இருக்கும் பெண்ணிடம் உரையாடும் விதமாகத்தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார் ருத்ரையா. மிகப்பெரிய தோல்வியடைந்த இந்தப் படத்தின் இயக்குநர் ருத்ரையா இயக்கிய இரண்டாவது மற்றும் கடைசிப் படமான கிராமத்து அத்தியாயம் படம்.