நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த படங்கள் ரீ- ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், அவர் நடிக்கவுள்ள படங்களின் அப்டேட்டுகளும் வெளியாகுவதால் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். 


தமிழ் சினிமாவில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். தொடர்ந்து டான்ஸர், உதவி இயக்குநர், நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல அவதாரங்களை எடுத்து தமிழ் சினிமாவுக்கே அடையாளமாக திகழ்கிறார் கமல்ஹாசன். அவர்  நாளைய தினம் (நவம்பர் 7) தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்கனவே அவர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படங்கள் ரீ- ரிலீஸ் ஆகியுள்ளது. மேலும் கமல் நடிக்கவுள்ள படங்களின் அப்டேட்டுகளும் வந்த வண்ணம் உள்ளது. அதனைப் பற்றி நாம் காணலாம் 


ரீ- ரிலீஸ் ஆன படங்கள்


வெற்றி விழா


மறைந்த இயக்குநர், நடிகர் பிரதாப் போத்தனின் இயக்கத்தில் வெளியான வெற்றி விழா படத்தில் கமல், அமலா, பிரபு, குஷ்பூ, சசிகலா, சலீம் கவுஸ், சௌகார் ஜானகி, ஜனகராஜ் என பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்தார். வெற்றி விழா படம் ராபர்ட் லுட்லம் எழுதிய The Bourne Identity நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. ஹாலிவுட் ஸ்டைலிலான திரைக்கதை, அடுத்தடுத்து ட்விஸ்ட் என இப்போது பார்த்தாலும் வெற்றி விழா படம் பிரமிப்பையே ஏற்படுத்தும். சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தது. 


அன்பே சிவம்


2003 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் கமல்ஹாசன், கிரண், மாதவன், நாசர், சந்தான பாரதி உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் ‘அன்பே சிவம்’. வித்யாசாகர் இசையமைத்த இப்படத்திற்கு கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதியிருப்பார். மேலும் விபத்தால் சிதைக்கப்பட்ட முகம், கை, காலில் இழப்பு என பார்ப்பதற்கே கண்கலங்க வைக்கும் ஒரு கேரக்டரில் அவர் நடித்திருந்தார். இந்த படம் கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது அனைவரும் பேவரைட் ஆன ஒன்று. 


விருமாண்டி 


2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்த படம் ‘விருமாண்டி’. இந்த படத்தில் அபிராமி, நாசர், பசுபதி, ரோகினி, நெப்போலியன் என பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்த படம் தென்கொரியாவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில் 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிய திரைப்படம் என்ற விருதை பெற்றது. படம் மிக சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கும். இந்த 3 படங்களும் ரீ-ரிலீஸ் ஆன நிலையில் முன்னதாகவே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது. 


அப்டேட்டுகள் இருக்கும் படங்கள் 


இந்தியன் 2


இயக்குநர் ஷங்கர் 1996 ஆம் ஆண்டு கமல்ஹாசனை வைத்து இந்தியன் படத்தை இயக்கியிருந்தார். அந்த காலக்கட்டத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் 27 ஆண்டுகள் கழித்து உருவாகிறது. இந்த படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா, சித்தார்த், மனோ பாலா, விவேக் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கும் நிலையில் அனைவரும் பேவரைட் ஆன “இந்தியன் தாத்தா” கேரக்டர் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி வெளியானது.


கமல்ஹாசன் 234


நாயகன் படத்துக்குப் பிறகு 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. “கமல் 234” என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டில் இன்று (நவம்பர் 6) மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


கல்கி 2898 ஏடி


நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலரும் நடிக்கும் படம் ‘கல்கி 2898 ஏடி’. மெகா பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் அப்டேட் அல்லது போஸ்டர் நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


கமல்ஹாசன் 233


தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியுள்ள ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் கமல் பிறந்தநாளன்று கண்டிப்பாக அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.