எங்கள் அப்பாவை பார்க்க எப்போதும் வீட்டைச் சுற்றி பெண்கள் கூட்டம் தான் இருக்கும் என மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் மகள் டாக்டர் கமலா செல்வராஜ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


காதல் மன்னன்:


தமிழ் சினிமாவில் ‘காதல் மன்னன்’ என்றால் இன்றைக்கும் அனைவரது நினைவுக்கும் வருபவர் ஜெமினி கணேசன் தான். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் என இரு முன்னணி நடிகர்கள் கோலோச்சிய காலத்தில், அவர்களுக்கு இணையாக திகழ்ந்தார். கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்த ஜெமினி கணேசன் 2005 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார். அவர் மறைந்தாலும் இன்றைக்கும் அவரது நடிப்பு நினைவுக்கூறப்படுகிறது. 


இப்படியான நிலையில் ஜெமினி கணேசன் பற்றி அவரது மகளும், பிரபல டாக்டருமான கமலா செல்வராஜ், பல நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில், “அப்பாவுக்கு அழகான சுருள் சுருளாக முடி இருக்கும். நானும் அக்காவும் இழுத்து விளையாடுவோம். ஜெமினி அப்பா அப்படி ஒரு ஹேண்ட்ஸ்சம். யார் அவரை பார்த்தாலும் காதலில் விழுந்துவிடுவார்கள். எங்க வீட்டுக்கும் கேட்டுக்கும் ரொம்ப தூரம். எப்பவும் வீட்டை சுத்தி பெண்கள் கூட்டம் இருக்கும். இவர் தான் எனக்கு இந்த ஜென்மத்துல கணவன் என்றெல்லாம் சொல்வார்கள்.


சாவித்திரி:


அப்பா, அந்த பெண்கள் ஒவ்வொருவரின் வீட்டையும் கண்டுபிடித்து, கையோடு அழைத்து சென்று, ‘எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. குழந்தைகள் எல்லாரும் இருக்காங்க. இப்படியெல்லாம் பண்ணாம, நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கணும்’ என அறிவுரை சொல்லுவார். இதற்கு நடுவில் ஷூட்டிங்கும் செல்வார். இதுதான் அப்பாவின் குணம். அப்படி இருந்த அப்பா நடிகை சாவித்திரியை கல்யாணம் செய்து கொண்ட விஷயத்தில் நான் யாரையும் விமர்சிக்க விரும்பவில்லை.


காரணம் சாவித்திரி அவரின் மாமா டார்ச்சரால் தான் அப்பாவுடன் எங்கள் வீட்டுக்கு வந்தார். என் அம்மா தான் கதவை திறந்து விட்டார். அன்றைய நேரத்தில் எங்க அம்மா தான் பாதுகாப்பு அளித்தார்.  எனக்கு சாவித்திரி மீது எந்த கோபமும் இல்லை. மேலும் அந்த சமயம் அப்பா என்னிடம், ‘ஸ்கூல்ல யாராவது கேட்டா தெரியாதுன்னு சொல்லிடு’ என  கூறினார். அந்த நேரம் தான் சாவித்திரியை திருமணம் செய்திருப்பார் என நினைக்கிறேன்.


நானும் அப்போது சிறிய வயதுடையவர்கள் என்பதால் அவ்வளவாக விவரம் தெரியாது. அதேபோல்  படிக்கும் போது எனக்கு கணக்கு வராது. அப்பா என்னை தலையில் குட்டி விடுவார். பயங்கரமாக வலிக்கும். அதே மாதிரி எங்கம்மாவுக்கு கார் ஓட்ட சொல்லி குடுக்கும்போது அப்படித்தான் தலையில் குட்டினார். வலி தாங்க முடியாமல் அம்மா பின்னால் இருந்த என்னை கத்துக்க சொல்லி அழைத்தார், அப்படித்தான் நான் கார் ஓட்டக் கற்றுக் கொண்டேன்” என கமலா செல்வராஜ்  தெரிவித்துள்ளார்.