திரையுலகில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இரு நடிகர்களுக்கு இடையே மிகுந்த போட்டி இருக்கும் . எம்.ஜி.ஆர் - சிவாஜி , ரஜினி -கமல் , விஜய் - அஜித் என முன்னணி நடிகர்களின் படங்கள் மோதிக்கொள்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் உண்மையில் இந்த போட்டி நடிகர்கள் எல்லாமே சினிமாவை தாண்டி , நெருங்கிய நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள் . மோதல் என்பது ரசிகர்களுக்கு மத்தியில்தான் இருக்கிறது. அந்த வகையில் ரஜினி- கமல் நட்பு குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம்..
கமல் - ரஜினி :
ரஜினி - கமல் இருவருடைய நட்பு, 1975-ல் வெளிவந்த 'அபூர்வராகங்கள்' படத்தில் தொடங்கியது. ’நினைத்தாலே இனிக்கும்', 'இளமை ஊஞ்சலாடுகிறது', 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' , ‘16 வயதினிலே’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அதே போல ரஜினி படத்தில் கமலும் , கமல் படத்தில் ரஜினியும் ஒருவருக்கொருவர் கெஸ்ட் ரோலில் நடிக்கவும் ஆசைப்பட்டிருக்கின்றனர். எந்தவொரு ஈகோவும் இல்லாதது என்கின்றனர் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் .
தங்களின் நட்பு பற்றி கமல் :
கமல்ஹாசன் மேடை ஒன்றில் ரஜினியை பற்றி பகிர்ந்திருந்தார். அதில் “ நானும் ரஜினியும் எப்படி பேசிக்கொள்வோம் என அறிந்தால் ரசிகர்கள் இப்படி மோதிக்கொள்ளவே மாட்டார்கள் . ஆனால் இரண்டு பக்கமும் ஒரு கோல் போஸ்ட் இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அப்படியே விட்டுவிட்டோம். நானும் ரஜினியும் விழா ஒன்றில் பங்கேற்ற பொழுது ரஜினி தளபதி படத்தின் டைட்டிலை காதில் சொன்னார். அப்போது எனக்கு கணபதி என விழுந்துவிட்டது. நான் உடனே வேண்டாங்க...இது என்னவோ விநாயகர் சதுர்த்தி போல இருக்கு என்றேன் . அதன் பிறகு அவர் நல்லாத்தானே இருக்கு தளபதி என்றார். ஓ! தளபதியா அருமையாக இருக்கு என்றேன் . அந்த அளவுக்கு நாங்கள் பேசுவோம். அதே போல ரஜினி சினிமாவை விட்டு விலகுவதாக என்னிடம் சொன்னார். உடனே நான் நீங்க போயிட்டீங்கன்னா நானும் போக வேண்டியதுதான். என்னையும் துரத்தி விட்டுருவாங்கய்யா.. போகாதீங்கன்னு சொன்னேன்.. இன்று அவர் நடித்த பல படங்களில் எனது பங்கும் உண்டு ..ஏனென்றால் அவர் சினிமாவை விட்டு போகக்கூடாது என தடுத்தவர்களில் நானும் ஒருவன் “ என்றார்.
ரஜினி , கமல் இருவருக்குமே குருநாதர் பாலச்சந்தர்தான். ரஜினி எப்போதுமே ஒரு படத்தின் கதையில் முடிவெடுக்க சிரமமாக இருந்தாலோ அல்லது ஆலோசனை தேவைப்பட்டாலோ உடனடியாக அவர் தொடர்புக்கொள்ளும் ஆள் கமலாகத்தான் இருப்பார் . அந்த அளவுக்கு இருவரும் திரையை தாண்டிய நெருங்கிய நண்பர்கள்.