நடிகர் கமல் ஹாசன் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள `விக்ரம்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு பாராட்டுகளும் கிடைத்து வருகின்றன. இந்நிலையில், மக்களின் பெருவாரியான ஆதரவையும், அன்பையும் கண்டு நெகிழ்ச்சியடைந்துள்ள நடிகர் கமல் ஹாசன் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பேசி தனது ரசிகர்களிடம் நன்றி தெரிவித்துள்ளார். தனக்கு ஆதரவு தந்ததற்கும், `விக்ரம்’ படத்தை வெற்றி பெறச் செய்ததற்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் கமல் ஹாசன்.



ராஜ்கமல் ஃப்லிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு, நடிகர் கமல் ஹாசன் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும், `விக்ரம்’ படத்தின் வெற்றி தன்னுடையது மட்டுமல்ல எனவும், இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களால் உருவாக்கப்படும் அனைத்து நல்ல படங்களுக்குமான வெற்றி எனவும் தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கானோரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், ரசிகர்கள் நல்ல திரைப்படங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.






`விக்ரம்’ படத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள `ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தைப் பெரிதும் பாராட்டியுள்ளார் நடிகர் கமல் ஹாசன். மேலும், தனது தம்பி சூர்யா படத்தின் இறுதி மூன்று நிமிடங்களில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளதாகவும், இந்தக் கதாபாத்திரத்திற்காக சம்பளம் பெறாமல் அன்புக்காக செய்து கொடுத்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார் நடிகர் கமல் ஹாசன். மேலும், அவர் இருவரும் இணைந்து அடுத்தடுத்த பாகங்களில் நடிக்கவுள்ளதாகவும் உறுதி செய்துள்ளார்.




இதுமட்டுமின்றி, கமல் ஹாசன் தனது ரசிகரும், இயக்குநருமான லோகேஷ் கனகராஜுக்குத் தன் கையால் எழுதிய கடிதம் ஒன்றையும் வழங்கியுள்ளார். இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில், `லைஃப்டைம் செட்டில்மெண்ட் லெட்டர்’ எனத் தனது பாணியில் கேப்ஷன் பதிவிட்டு, தனது நெகிழ்ச்சியான உணர்வை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.





`விக்ரம்’ படத்தில் காளிதாஸ் ஜெயராம், ஸ்வாதிஷ்டா, ஷிவானி நாராயணன், நரேன், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத், அர்ஜுன் தாஸ் முதலான பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். வெறும் மூன்று நாள்களில் உலகம் முழுவதும் சுமார் 150 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது `விக்ரம்’ திரைப்படம்.