தமிழ் சினிமாவின் மூத்த கலைஞரும், பல்வேறு விதமான புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியவருமான நடிகர் கமல்ஹாசன் தனது புகைப் பழக்கத்தை எப்படி கைவிட்டார் என்பதன் பின்னணியில் உள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


`களத்தூர் கண்ணம்மா’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன்பிறகு நடன இயக்குநர், நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல்வேறு பரிணாமங்களை அடைந்ததோடு, அவற்றில் முத்திரை பதித்த கமல்ஹாசன் `உலகநாயகன்’ என்ற பட்டத்துடன் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி, இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளார்.


சினிமாவில் புகழ் மாலைகளைச் சூடிய கமல்ஹாசன், அரசியலிலும் கால் பதித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், தமிழக சட்டமன்ற தேர்தலிலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியி்ட்டது. நடிப்பில் பல பரிமாணங்களை வெளிப்படுத்திய நடிகர் கமல்ஹாசன், கடந்த 2017ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியின் `பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராகக் களமிறங்கி, சின்னத்திரையிலும் கவனம் செலுத்த தொடங்கினார். இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசனுக்கு வந்தடைந்துள்ளது. 



தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் `விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்தப் படத்தில் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், `விக்ரம்’ படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசனும் அவரின் நண்பரும், பிரபல இயக்குநருமான கே.எஸ்.ரவிக்குமாரும் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வீடியோ பதிவு ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.






இந்த நேர்காணலில், இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் `நான் `அவ்வை சண்முகி’ படத்தில் வேலை செய்யும்போது, அதற்கு முன்பே `முத்து' படத்தை இயக்கி இருந்தேன். அப்போது நான் புதிதாக புகைபிடிக்கத் தொடங்கியிருந்தேன். `அவ்வை சண்முகி’ படப்பிடிப்பின் போது, அங்கு வந்திருந்த என் நண்பர்கள், என்னைத் தனியாக அழைத்து `கமல் சார் படத்தை பல திரையரங்கங்களில் நாம் பார்த்து ரசித்திருக்கிறோம். ஆனால் அவருடைய படப்பிடிப்பில் நீ இப்படி புகைபிடித்துக் கொண்டிருப்பது சரியில்லை’ என்று சொல்ல, மற்றொரு நண்பன் என்னை அடிக்கவே வந்துவிட்டான்’ என்று கூறியுள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர், `அன்று முதல் நான் இந்தப் புகைப்பழக்கத்தை நான் கைவிட்டேன். இதற்கு முழு முதற்காரணம் கமல் சார் மட்டுமே’ எனக் கூறியுள்ளார். 



இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பேசி முடிப்பதற்கு முன்பே பேச தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், `நான் சிறுவயதிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டேன். மீசையும் சிகரெட்டும் ஒன்றாக வளரும் என்று நினைத்துக்கொண்டிருந்த நேரம் அது. அப்போது நான் புகை பிடிப்பதைப் பார்த்த லைட்மேன் ஒருவர், எனது சிகரெட்டை என் கையில் இருந்து பிடுங்கியதோடு, `அடி திருப்பி விடுவேன்; இப்ப தான் உன்னை `அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே’ என்று பார்த்த மாதிரி இருக்கு! இந்த வயதில் உனக்கு சிகரெட் பழக்கமா?’ என்று கடுமையாகத் திட்டினார்’ என்று கூறியதோடு, தொடர்ந்தார்.


`அதன்பிறகு சினிமாவில் அனைவர் முன்னிலையும், மறைந்து மறைந்து புகைப்பிடிக்க முடியவில்லை. சுதந்திரமாக சிகரெட் பிடிக்கும் ஒரே இடம் கழிவறைதான். ஆனால் கழிவறை சென்று சிகரெட் பிடிக்க வேண்டுமா என்று யோசித்து, யோசித்து பிறகு, அந்தப் பழக்கத்தையே முழுவதுமாக விட்டுவிட்டேன்’ என்று கூறியுள்ளார். 


இருவரும் தங்கள் புகைப்பழகத்தைக் கைவிட்டது தொடர்பாக பேசியுள்ள இந்தப் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.