மகாநதி படத்தை தான் எடுப்பதற்கு தனது மகள்களை கடத்தவிருந்த சம்பவம் தான் காரணம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 


கடந்த 1994 ஆம் ஆண்டு சந்தானபாரதி இயக்கத்தில் கமல்ஹாசன், சுகன்யா, கொச்சின் ஹனீபா, பூர்ணம் விஸ்வநாதன்,எஸ்.என். லட்சுமி உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் “மகாநதி”. இந்த படத்தின் கதை, திரைக்கதையை கமல்ஹாசன் எழுத, இளையராஜா இசையமைத்திருந்தார். கமலின் சினிமா கேரியரில் மகாநதி படத்துக்கு மிக முக்கியமான இடம் உண்டு. 


இந்த படத்தில் இடம்பெற்ற அத்தனை கேரக்டர்களுக்கும் இந்தியாவில் ஓடும் நதிகளின் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கும். பேராசையால் வாழ்க்கையின்  அதளபாளத்திற்கு சென்று தன் மகனையும், மகளையும் தொலைத்த ஒரு தந்தை அவர்களை மீட்டெடுப்பதே இப்படத்தின் கதையாகும். குறிப்பாக  கொல்கத்தாவில் விபச்சாரம் நடக்கும் இடத்தில் இருந்து மகளை மீட்கும் காட்சிகள் படம் பார்ப்பவர்களை கண்கலங்கை வைக்கும். ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம், தைப்பொங்கலும் வந்தது பாலும் பொங்குது, எங்கேயோ திக்குதிசை உள்ளிட்ட பாடல்களும் இளையராஜாவின் இசையில் எவர்க்ரீன் ஹிட்டாக அமைந்தது. 


காவிரிக்கரையில் பிறந்து கூவம் ஓடும் சென்னையில்  வாழ்க்கை சின்னாப்பின்னமாகி கங்கைக்கரையில் அதனை மீட்டெடுக்கும் கதை என முழுக்க முழுக்க நதிகளுடனேயே கமல் பயணித்திருப்பார். 


மகாநதி உருவான கதை 


இதனிடையே மகாநதி படம் எப்படி உருவானது என நடிகர் கமல்ஹாசன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், “மகாநதி எழுத என்னைத் தூண்டியது பற்றி நான் இதுவரை பேசியது இல்லை. ஆனால் என் மகள்கள் இந்த உலகத்தை புரிந்துகொள்ளும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள். தற்செயலாக எனது மகள்களை தனது வீட்டு உதவியாளர் கடத்திச் செல்ல  திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. நான் கோபமாகவும், பதட்டமாகவும், என் குழந்தையின் பாதுகாப்பிற்காக கொலை செய்யக்கூட தயாராக இருந்தேன். 


இதற்கிடையில் தான் நான் ஒரு புதுப்படத்திற்கு கதை எழுத வேண்டும் என நினைத்தப் போது இந்த சம்பவம் நடந்ததால் ஒரு மாதம் எழுத முடியாமல் போனது. அதன்பின்னர் கதை எழுத உட்கார்ந்தபோது என் பயம் காரணமாக இந்த சம்பவம் அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


இந்தப்படம் வெளியாகி 29 ஆண்டுகளாகி விட்ட நிலையில் தமிழ் சினிமாவில் கதையாலும் திரைக்கதை உத்தியாலும் யதார்த்ததை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை காட்டிய மகாநதி படத்தை மனம் கனத்துப் போகும் என்பதே நிதர்சனம்..!


மேலும் படிக்க: படைப்பு சுதந்திரத்துக்கு எதிரானது... காவல்துறைக்கு கண்டனம்... உதவி இயக்குநருக்கு ஆதரவாக பா.ரஞ்சித் ட்வீட்!