மாமன்னன் திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில் படக்குழுவினரை வாழ்த்தி நடிகர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.


வாழ்த்திய கமல்ஹாசன்


மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றதுடன், படத்தை தான் ஏற்கெனவே பார்த்துவிட்டதாகக் கூறி, இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினரைப் பாராட்டி பேசியிருந்தார்.


இந்நிலையில், “திரைப்படத்தை பார்த்ததோடு இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்று உணர்வுப்பூர்வமாக பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசனுக்கு மாமன்னன் படக்குழுவினர் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை ட்வீட் செய்திருந்தார்.


இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் வகையில் தற்போது நடிகர் கமல் ட்வீட் செய்துள்ளார்.  ”மானுடர் அனைவரும் சமம் என்பது என் வாழ்க்கை முறை.  என் கருத்திற்கு வலிமை சேர்க்கும் மாமன்னனுக்கு வாழ்த்துகள்” என நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். கமல்ஹாசனின் இந்தப் பதிவு இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.


 






லைக்ஸ் அள்ளும் மேக்கிங் வீடியோ


நாளை மாமன்னன் படம் வெளியாகும் நிலையில், சிவாஜி கணேசனின் “கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா” பாடலை நடிகர் வடிவேலு பாட, அப்பாடலின் பின்னணியில் மாமன்னன் மேக்கிங் வீடியோவை படக்குழு இன்று பகிர்ந்துள்ளது.


கோலிவுட் வட்டாரத்தில் கடந்த இரண்டு வாரங்களாகவே இப்படம் பேசுபொருளாகியுள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் ஃபாசில், வடிவேலு, நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஷூட்டிங் தளத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் பங்கேற்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவை இன்று படக்குழு பகிர்ந்து ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இணைய விமர்சனங்கள்


இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முதன்முறையாக இப்படத்தில் மாரி செல்வராஜ் உடன் கைக்கோர்த்துள்ள நிலையில், முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள், இயக்குநர்கள் எனப் பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் தேவர் மகன் படம் மீதான தன் விமர்சனங்களை நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் முன்வைத்தது கலவையான விமர்சனங்களைப் பெற்றது இணையத்தில் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது.


மேலும் மாரி செல்வராஜ் மீது இச்சம்பவத்தைத் தொடர்ந்து தனிப்பட்ட தாக்குதல்களையும் பலரும் இணையத்தில் முன்வைத்து வரும் நிலையில், தற்போது கமல் படத்தைப் பாராட்டியுள்ளது மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.