இந்திய சினிமாவின் பெருமைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படம் வரும் ஜுன் 5ம் தேதி ரிலீசாகிறது. இந்த படத்தின் ட்ரெயிலர் நேற்று ரிலீசானது.
தக் லைஃப் ட்ரெயிலர்:
மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர், ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெயிலர் நேற்று ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும், ட்ரெயிலரில் இடம்பெற்ற காட்சிகள் பலவும் படத்தின் மீது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இந்த படத்தின் ட்ரெயிலரின் இறுதியில் கமல்ஹாசனும், சிம்புவும் மோதிக் கொள்வது போல காட்சி இருப்பதால் இந்த படத்தில் கமலுக்கு சிம்புதான் வில்லன் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மறுபுறம் அபிராமி சிம்புவிற்கு மனைவியாக காட்டப்பட்டிருக்கும் நிலையில், கமல் த்ரிஷாவுடனும் ரொமான்ஸ் காட்சிகளில் ஈடுபடும் காட்சி இடம்பெற்றுள்ளது.
லிப் லாக் அடித்த கமல்ஹாசன்:
மேலும், கமல்ஹாசன் அபிராமிக்கு லிப்லாக் தரும் காட்சியும் படத்தில் இடம்பெற்றுள்ளது. மிகப்பெரிய ரவுடியாக உள்ளவருக்கும், அவரது வளர்ப்பு மகனுக்குமான மோதலே இந்த தக் லைஃப் என்று சிலர் கூறுகின்றனர். நெட்டிசன்கள் பலரும் படத்தின் ட்ரெயிலரில் கமல்ஹாசன் அபிராமிக்கு முத்தம் கொடுக்கும் காட்சியை ட்ரெண்ட் செய்து என்ன இது ஆண்டவரே? என்று பதிவிட்டு வருகின்றனர். 70 வயதிலும் கமல்ஹாசன் ரொமான்ஸ் காட்சிகளில் பட்டையை கிளப்பி வருவதாகவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
கமலுக்கு ஜோடியா த்ரிஷா?
அதேபோல, கமல்ஹாசன் த்ரிஷாவிடம் மேடம் ஐ அம் யூவர் ஒன்லி ஆடம் என்று கூறியிருப்பார். இதனால், சிம்புவிற்கு ஜோடியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட த்ரிஷா கமல்ஹாசனுடன் காதல் காட்சிகளில் நடித்திருக்கும் காட்சி சிம்பு ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
நாயகன் திரைப்படத்திற்கு பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கியுள்ளது.
ரங்கராய சக்திவேல் நாயகர் என்ற கதாபாத்திரத்தில் கமல்ஹாசனும், அமரன் என்ற கதாபாத்திரத்தில் அவரது வளர்ப்பு மகனாக சிம்புவும் நடித்துள்ளனர். அசோக் செல்வன் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். நாசர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வடிவுக்கரசி, சின்னி ஜெயந்த், வையாபுரி, பகவதி பெருமாள், பாபுராஜ், அர்ஜுன் சிதம்ரபம் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளது.