Lufthansa flight Auto Pilot: ஆட்டோ-பைலட் முறையில் பறந்த விமானத்தில் 200 பேர் பயணித்தது குறிப்பிடத்தக்கது.
ஆட்டோ-பைலட்டில் பறந்த விமானம்:
ஸ்பெயின் நாட்டை நோக்கி பயணித்த லுஃப்தான்சா விமானத்தின் விமானி மயங்கி விழுந்த நிலையில், அந்த வாகனம் 10 நிமிடங்களுக்கு ஆட்டோ பைலட் முறையில் பயணித்த அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மன் நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்த நேரத்தில் மற்றொரு கேப்டன் கழிவறைக்கு சென்று இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதியன்று ஜெர்மனியின் ஃப்ராங்க்ஃபர்ட்டிலிருந்து, ஸ்பெயினின் செவிலே பகுதியை நோக்கி சென்றபோது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஸ்பெயினின் விபத்துகள் பற்றிய விசாரணை ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அந்தரத்தில் 205 உயிர்கள்:
ஏர்பஸ் A321 எனப்படும் அந்த விமானத்தில் 199 பயணிகள் உடன், 6 விமான நிறுவன பணியாளர்களும் இருந்துள்ளனர். தரையிறங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக கேப்டன் கழிவறைக்கு சென்ற நேரத்தில் சக விமானி எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்துள்ளாஎர். இதனால் மனித கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சுமார் 10 நிமிடங்களுக்கு ஆட்டோ-பைலட் முறையில் விமானம் செயல்பட்டுள்ளது.
மயக்கமடைந்த விமானி எதிர்பாராத விதமாக சில கட்டுபாடுகளை செயல்படுத்தி இருந்தாலும், முழு நேரமும் செயல்பாட்டில் இருக்கக் கூடிய ஆட்டோ பைலட் அம்சத்தால் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாமல் விமானம் நிலையாக இயங்கியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 10 நிமிடங்களின்போது அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதற்கான கூக்குரல்கள், காக்பிட்டில் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காப்பற்றப்பட்ட 205 உயிர்கள்:
இதனிடையே, சுமார் 8 நிமிட இடைவெளிக்குப் பிறகு கழிவறையில் இருந்து வெளியே வந்த கேப்டன் நிலையை உணர்ந்து, விமானிகள் இருக்கக் கூடிய காக்பிட்டில் பலத்த சத்தத்தை எழுப்பக் கூடிய பஸ்ஸருக்கான டோர் ஓபனிங் கோடை பதிவு செய்துள்ளார். 5 முறை வரை முயற்சி செய்தும் அது பலனளிக்காமல் இருந்துள்ளது. விமானத்தில் இருந்த பணிப்பென், தொலைபேசி வாயிலாகவும் காக்பிட்டில் மயங்கிக் கிடந்த விமானியை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.
இறுதியாக கேப்டன் எமர்ஜென்சி கோடை பதிவு செய்து கதவை திறக்க முற்பட்டுள்ளார். அதேநேரம், மெல்ல கண்விழித்த விமானி தாமாக முயன்று வந்து கதவை திறந்துவிட்டுள்ளார். உடனடியாக உள்ளே சென்ற கேப்டன் விமானத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததோடு, மாட்ரிட்டில் ஒரு அவசர தரையிறக்கத்தையும்மேற்கொண்டார். இதனால் பயணிகள் மற்றும் பணியாளர்கள் என அனைத்து தரப்பினரும் பத்திரமாக உயிர் தப்பினர். தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட விமானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானிக்கு என்ன பிரச்னை:
மருத்துவ பரிசோதனைகளில் துணை விமானிக்கு இருந்த கண்டறியப்படாத நரம்பியல் பிரச்னை காரணமாக வலிப்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. முன்கூட்டியே அறிகுறிகள் ஏதும் தெரியாமல் இருந்தால் இந்த பிரச்னைகளை வழக்கமான மருத்துவ பரிசோதனைகளின் போது அடையாளம் காண்பது கடினம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையை தாண்டி, சம்பவம் தொடர்பாக வேறு எந்த கருத்தும் கூற முடியாது என லுஃப்தான்சா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.