தமிழ் திரையுலகின் தந்தை எனப் போற்றப்படும் மறைந்த டி.ராமானுஜத்தின் நூற்றாண்டு விழா நேற்று சென்னை, மயிலாப்பூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) பேசியதாவது: 


"வணக்கம். இது ஒரு குடும்ப விழா என்றால் மிகையாகாது. இந்த மேடையில் அமர்ந்திருக்கும் பலரும் விழா நாயகர்கள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து விழா எடுக்கும் மனிதர்களைப் பற்றி சொல்லுகையில் நான் சொல்லுவதை ஒரு கடைக்குட்டி வந்து சொல்லுவதாக எடுத்துக் கொள்ளவேண்டும். சரவணன் சார், நான் களத்தூர் கமல் என்று என்னை எண்ணி பேசியதே கிடையாது. நான் 21 வயதில் அவரை சந்திக்கச் செல்லும்போது அவர் கொடுத்த மரியாதை, மற்றவர்களுக்கு நான் அப்படி மரியாதை தர வேண்டும் என நினைக்க வைத்தது.


நான் 21 வயது இருக்கும்போது என்னை தொழில்நுட்பக் கலைஞராக தான் நினைத்துக் கொண்டிருந்தேன். நான் நடிகனாவேன் என்றெல்லாம் எனக்கு சந்தேகம். சின்ன சின்ன வேடங்கள் செய்து கொண்டிருந்தேன். அப்போது பாலுமகேந்திரா முதல் படம் எடுக்க இருந்தார். மலையாளத்தில் அதற்கு முன் படமெடுத்தார். ஆனால் தமிழில் அவரது ஃப்ரேமிங் இங்கு மாறிவிடும். நான் டி ராமானுஜத்திடம் சென்று பேசுவேன். நான் இந்த மேடையில் பாலுமகேந்திரா பற்றி பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். டி.ராமானுஜம் மெதுவாக தான் எல்லாம் நடக்கும் என சொல்கிறார் என்று பாலுமகேந்திராவிடம் கோலிமூட்டினேன்.


அதன் பின், தன் ஃப்ரேமை எந்த ப்ரொஜக்‌ஷனிஸ்ட்டாலும் மாற்ற முடியாதபடி பாலுமகேந்திரா செய்தார். இப்படி நடந்த கூட்டு முயற்சியால் வளர்ந்தது தான் இந்தத் துறை. ஒருவருக்கொருவர் குறை சொல்லிக் கொண்டிருக்காமல், குறையைத் தீர்ப்பது எப்படி என யோசிப்பதில் முக்கியமான வல்லுநர் டி.ஆர். வரி எப்படி போடுவது எப்படி என அரசுக்கு சொல்லிக் கொடுத்தது வரை அவர் செய்தார். அதனால் இன்று நான் உள்பட பலர் வசதியாக உள்ளார்கள்.


இந்த விழாவை நம் குடும்ப விழாவாக நடத்த வேண்டும் என நினைத்தவர்களுக்கு நன்றி. இந்தக் குடும்பம் மிக சின்ன குடும்பம். பல தகராறுகள் வரும், பல சிக்கல்கள், விவாதங்கள் வரும். நாமெல்லாம் ட்ரெய்ன் வந்து நிற்கும்போது செயல்படும் வியாபாரிகள் போல், ட்ரெய்ன் போனதும் ஒருவருக்கொருவர் முகம் பார்த்துக் கொள்ள வேண்டும். யாரையும் ரொம்ப திட்ட வேண்டாம். அதில் பெரிய முன்னாதாரணமா இருந்தவர்கள் டி.ஆர், சரவணன் சார். 


நான் டால்பியில் ஒரு படம் எடுக்கலாம் என்றேன். டி.ராமானுஷம் அதற்கான ஏற்பாடுகள் செய்து என்னை முன்னிறுத்தி பேச வைத்தார். இங்கு அமர்ந்திருக்கும் அனைவருமே புகழ்மிக்கவர்கள். என்னுடைய இன்விடேஷனில் என் பெயர் எங்கே இருக்கும் என வழக்கமாக டிக் போட்டுக் காண்பிப்பார்கள். ஆனால் இந்த விழாவுக்கு அவர்க்ள் கூப்பிடாவிட்டாலும் நான் வந்திருப்பேன். அவர் திரையுலகின் தந்தை என சொல்வது மிகவும் பொருத்தம்.  வயது வித்தியாசமின்றி அனைவரையும் நடத்தினார். உடம்பு சரியில்லாத நிலைமையிலும் கூட நின்று பேசி முடித்துக் கொடுத்துவிட்டு போவார். அவருக்கு விழா எடுக்க வேண்டும் எனத் தோன்றிய அத்தனை பேருக்கும் நன்றி” என கமல்ஹாசன் பேசினார்.