ஊழல் அதிகமானதால் தான் இந்தியன் தாத்தாவின் 2ஆம் வருகைக்கு அர்த்தம் கிடைத்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 


லைகா நிறுவனம் தயாரிப்பில் “இந்தியன் 2” படம் உருவாகியுள்ளது. பிரமாண்ட பொருட்செலவில் இப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். இதில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு, மாரிமுத்து உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் ஜூலை 12 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இன்று மாலை 7 மணிக்கு இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலை சென்னையில் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் மும்பையில் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் விஜயா மாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். 


இந்நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “இந்தியன் 2 படம் 5 வருடங்களாக எடுக்கப்பட காரணம் அதில் பணியாற்றிய பிரபலங்களோ அல்லது தொழில்நுட்ப கலைஞர்களோ இல்லை. இயற்கை தான் காரணம். கொரோனா, விபத்து என பல விஷயங்கள் இடையூறாக வந்தது. அதிலிருந்து எங்களை மீட்டு தோளில் தூக்கி வந்த லைகா நிறுவனத்துக்கும், ரெட் ஜெயன்ட் நிறுவனத்துக்கும் இந்தியன் 2 மற்றும் 3 ஆம் பாகம் கடமைப்பட்டுள்ளது. இப்படத்தின் வெற்றியை முதல் ஆளாக அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்பது எனக்கும், ஷங்கருக்கும் ஆசையாகும். காரணம் இப்படத்தை ஒரு ரசிகனாக உதயநிதி ஸ்டாலின் ஏற்று நடத்தியுள்ளார். 


இந்த படத்தில் நடித்தவர்கள் சம்பளம் வாங்கி நடித்தார்களோ இல்லையோ சந்தோஷமாக நடித்தார்கள். இன்னும் 25 ஆண்டுகள் கழித்தாலும் இதை சொல்லலாம். 2 ஆம் பாகம் என்னும் பேஷன் வருவதற்கு முன்னதாகவே நாங்கள் இப்படத்தை எடுத்து விட்டோம். 1996 ஆம் ஆண்டு இந்தியன் படத்தின் டப்பிங்கின் போதே 2ஆம் பாகம் பற்றி பேசினோம். இந்தியன் 2 படத்துக்கான கருவை எங்களுக்கு இன்றும் கொடுத்துக்கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி. ஏனென்றால் இந்த ஊழல் அதிகமானதால் தான் இந்தியன் தாத்தாவின் 2ஆம் வருகைக்கு அர்த்தம் கிடைத்துள்ளது. 


நான் ஒரு தலைமுறையோடு நடித்துக் கொண்டிருக்கிறேன் என பெருமையாக உள்ளது. என்னுடைய நண்பர்களான நெடுமுடி வேணு, மனோபாலா, விவேக் போன்றவர்கள் இந்த விழாவில் பங்கேற்க வேண்டியது. அவர்கள் இல்லை என்பது வருத்தமாக உள்ளது. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதற்கு இந்தியன் படத்தின் பாகங்கள் உதாரணம்” என தெரிவித்துள்ளார்.