இந்திய சினிமாவின் கலைப்பிதாமகனாக வலம் வருபவர் கமலஹாசன். சிறு வயது முதலே நடித்து வரும் கமல்ஹாசன் நடிப்பு, இயக்கம், இசை, பாடல், நடனம், ஸ்டண்ட் என்று திரைத்துறையின் சகலகலா வல்லவனாகவே வலம் வருகிறார். அவரது பல படங்கள் அடுத்தடுத்த பல தலைமுறை திரைத்துறையினருக்கும் பாடமாகவே உள்ளது.




அவரது படங்களிலே மிகவும் முக்கியமான திரைப்படம் அபூர்வ சகோதரர்கள். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த அந்த அப்பு கதாபாத்திரத்தை எப்படி படமாக்கினார்கள்? கமல் அந்த காட்சிகளில் எப்படி நடித்தார்? என்று இன்றும் விவாதமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசன் அந்த படத்தின் வசனகர்த்தா கிரேஸி மோகன் மற்றும் சக நடிகர் சந்திரமெளலி ஆகியோருடன் இதுதொடர்பாக கலந்துரையாடியது இப்போது வைரலாகி வருகிறது.


அதில், கமல்ஹாசன் பேசியிருப்பதாவது, “அபூர்வ சகோதரர்கள் படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு பெட்டிக்குள் என்னை பாதியளவு புதைத்துவிட்டனர். பெட்டியில் இருந்த மண்ணில் ஏகப்பட்ட சிவப்பு எறும்புகள். நடித்துக்கொண்டிருக்கும்போதுதான் இப்படி எறும்புகள் கடிப்பது தெரிந்தது. 






எறும்புகள் கடித்துக்கொண்டே இருந்ததால் நான் மற்றவர்கள் மீது எரிந்து, எரிந்து விழுகிறேன். சீக்கிரம் எடுத்து தொலைங்க என்று கூறிவிட்டேன். அதை இப்போது நினைத்தால் கூட கால் அரிக்கிறது. அப்பு கதாபாத்திரத்திற்கு இடுப்பிற்கு கீழ் பகுதி இயற்கையாக இருப்பது போன்று இருந்தால், நன்றாக இருக்காது என்பதால், முதுகின் நடுப்பகுதியில் இருந்து செட் செய்திருந்தோம். அப்போதுதான் அந்த கதாபாத்திரம் நடப்பதற்கு சரியாக இருந்தது.”


இவ்வாறு கமல்ஹாசன் கூறுகிறார்.


கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படம் இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசித்து பார்க்கும் படமாக உள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன் காவல்துறை அதிகாரியான தந்தை கதாபாத்திரத்திலும், அப்பு என்ற சர்க்கஸ்காரராக குள்ளமான கமல்ஹாசனாகவும், ராஜா என்ற மெக்கானிக் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். மூன்று வேடங்களுக்கும் கமல்ஹாசன் வித்தியாசமான நடிப்பை கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருப்பார்.




குறிப்பாக, அப்பு கமல் வில்லன்களை சர்க்கஸ் பாணியிலே பழிவாங்கும் காட்சிகள் ரசிகர்களால் மீண்டும், மீண்டும் ரசிக்கும் வகையில் இருந்தது. இளையராஜா இசையில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தின் திரைக்கதை அபூர்வ சகோதரர்கள் படத்தின் திரைக்கதையை தழுவி எடுக்கப்பட்டது என்றே சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண