இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 


இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசபெத் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 96.  உலகின் நீண்டகாலம் ராணியாக ஆட்சி செய்த பெருமைக்குரிய இரண்டாவது நபர் என்ற பெருமைக்கு ராணி எலிசபெத் சொந்தக்காரரான அவரது இறப்புக்கு உலகத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.


 






அந்தப்பதிவில், “  எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார்.


25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார். அநேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான்.





5 ஆண்டுகளுக்கு முன்னர்  லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. தங்கள் பிரியத்திற்குரிய ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று பதிவிட்டு இருக்கிறார்.


அவரின் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல்  தெரிவிக்கும் வகையில் பதிவுகளை வெளியிட்டு இருக்கின்றனர்.


 






பிரதமர் மோடி பதிவிட்ட பதிவில், “ கடந்த 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டு எனது இங்கிலாந்து பயணத்தின்போது, ராணி இரண்டாம் எலிசபெத் உடன் நான் மறக்கமுடியாத சந்திப்புகளை மேற்கொண்டேன். அவரது அரவணைப்பையும் கருணையையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ஒரு சந்திப்பின் போது மகாத்மா காந்தி தன் திருமணத்திற்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை என்னிடம் காட்டினார்” என்று பதிவிட்டிருந்தார். 


 






முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்ட பதிவில், “ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. ஏழு தசாப்தங்கள் நீடித்த ஆட்சி, 15 பிரதமர்கள் மற்றும் நவீன வரலாற்றில் பல முக்கிய திருப்புமுனைகளுக்குப் பிறகு, இரண்டாவது எலிசபெத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது” என்று பதிவிட்டிருந்தார்.