நடிகர் ரஜினிகாந்தின் 173வது படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர்.சி விலகிய நிலையில், அவர் மீண்டும் இணைவாரா என்பது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

தலைவர் 173

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் கடைசியாக கூலி என்ற படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் ரஜினியின் 172வது படமாக உருவானது. தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரிலீசாகும் என கூறப்படுகிறது. இதனிடையே நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு நவம்பர் முதல் வாரத்தில் வெளியானது. 

அதாவது தமிழ் சினிமாவின் இரு துருவங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் நீண்ட இடைவெளிக்குப்பின் இணையவுள்ளனர். இந்த முறை கமல் தயாரிப்பாளராகவும், ரஜினி நடிகராகவும் களமிறங்குகின்றனர். இந்த படத்தை இயக்குநர் சுந்தர். சி இயக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டது. அவரும் ஏற்கனவே ரஜினியை வைத்து அருணாச்சலம், கமல்ஹாசனை வைத்து அன்பே சிவம் ஆகிய படங்களை இயக்கியிருந்தார். அதனால் இந்த கூட்டணி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 

Continues below advertisement

விலகிய சுந்தர்.சி

இந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக ரஜினி படத்தை இயக்க முடியாது என சுந்தர்.சி கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இத்தகைய கடின முடிவை எடுத்திருக்கும் நிலையில், இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு பின்னால் அரசியல் அழுத்தம் இருக்கிறது, சுந்தர் சி சொன்ன கதையில் உடன்பாடில்லை என பல தகவல்கள் ரெக்கை கட்டி பறந்தது. 

காரணம் சொன்ன கமல்ஹாசன்

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், ரஜினி 173வது படம் பற்றி பேசியுள்ளார். அதாவது, “இந்த திட்டத்தில் இருந்து விலகிய சுந்தர்.சி மீண்டும் இணைவாரா என்பது அவருக்கு தான் தெரியும். நான் முதலீட்டாளர், எனக்கு நட்சத்திரத்திற்கு பிடித்த கதையை படமாக எடுப்பதே எனக்கு ஆரோக்கியம். ரஜினிக்கு பிடித்தமான நபர்களிடம் நான் கதை கேட்டு வருகிறேன். புதியவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில் சுந்தர்.சி விலகியதாக அறிவித்த பிறகும், பட அறிவிப்பு தொடர்பான எந்த பதிவையும் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கவில்லை. இதனால் அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.