அமெரிக்கா சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் ஒப்பனை கலைஞர் மைக் வெஸ்ட்மோரை சந்தித்து உரையாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள கமல்ஹாசன் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆகி வசூலில் மிகப்பெரிய சாதனைப் படைத்தது. இதனைத் தொடர்ந்து கமல் அடுத்ததாக இந்தியன் 2 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கும் படத்திலும், மணிரத்னம் இயக்கும் படத்திலும் அவர் ஹீரோவாக நடிக்கிறார். இப்படியான நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கமல் வில்லனாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
பான் இந்தியா படமாக நடிகர் பிரபாஸ் நடிக்கும் “கல்கி” படத்தில் தான் கமல் வில்லனாக நடிக்க உள்ளார்.தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டைட்டில் வீடியோவும் சில தினங்களுக்கு முன் அமெரிக்காவில் நடைபெற்ற காமிக் கான் நிகழ்ச்சியின் போது அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்காக மிகப்பெரிய சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே காமிக் கான் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு ரசிகர்களை சந்தித்த அவர், தெருக்களில் தனியாக நடந்து சென்ற புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இப்படியான நிலையில் கமல்ஹாசன் ஆஸ்கார் விருது பெற்ற ஒப்பனை கலைஞர் மைக் வெஸ்ட்மோரை சந்தித்தார். அப்போது இருவருக்குமிடையேயான 40 ஆண்டு கால நட்பு மற்றும் தொழில் ரீதியான பயணத்தை கமல் நினைவு கூர்ந்தார்.
வெஸ்ட்மோர் கமல்ஹாசனின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படங்களாக கருதப்படும் 'இந்தியன்', 'அவ்வை சண்முகி' மற்றும் 'தசாவதாரம்' உள்ளிட்ட பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.முன்னதாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா சென்றிருந்த கமல் வெஸ்ட்மோரை சந்தித்து பேசியிருந்தார். வெஸ்ட்மோர் கைவண்ணத்தில் உருவான இந்தியன் தாத்தா கெட்டப் கமலுக்கு நன்கு பொருந்தி போயிருந்தது குறிப்பிடத்தக்கது.