இந்திய சினிமாவின் பிரம்மாண்ட பட இயக்குநர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் 1996-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். கமல்ஹாசன் நடிப்பில் வர்ம கலை மூலமாக லஞ்சத்தை ஒழிக்கும் சுதந்திர போராட்ட வீரர் கதையாக வெளியான இந்த படம் தமிழில் பிரமாண்ட வெற்றி பெற்றது. சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2ம் பாகம் இன்று வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது முதலே இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த இந்தியன் 2 படம் இன்று வெளியானது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் இன்று கோவை மாவட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.




மரக்கன்றுகள் வழங்கிய ரசிகர்கள்


படத்தில் கமல்ஹாசன் மீண்டும் ஊழலுக்கு எதிராக போராடி வரும் வயதான சுதந்திரப் போராட்ட வீரரான சேனாபதியாக மீண்டும் நடிக்கிறார். மேலும் சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி சங்கர், குல்ஷன் குரோவர், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த படம் வெளியாகி உள்ள நிலையில், கமல் ரசிகர்கள் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஊழலுக்கு எதிராக கமல் சிறப்பாக நடித்துள்ளதாகவும், படம் மிகவும் நன்றாக உள்ளதாக கூறிய ரசிகர்கள் இந்தியன் 3 படத்திற்காக காத்திருப்பதாக தெரிவித்தனர். இந்தியன் 2 படம் வெளியானதை அடுத்து திரையரங்களில் கமல்ஹாசன் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இந்த நிலையில் அர்ச்சனா திரையரங்கில் மக்கள் நீதி மய்யம் மற்றும் கமல்ஹாசன் ரசிகர்கள் சார்பில் திரைப்படம் பார்க்க வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் படிக்க : Indian 2 Review: ரசிகர்களுக்கு விருந்தா? லஞ்சத்தை ஒழிக்க மருந்தா? இந்தியன் 2 முழு திரை விமர்சனம் இதோ


Indian 2 Day 1 Box Office: பாக்ஸ் ஆஃபிஸில் மிரட்டும் இந்தியன் 2! முதல் நாள் முடிவதற்குள் இத்தனை கோடிகள் வசூலா!