பிரபாஸ் நடிப்பில், நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 AD (Kalki 2898 AD) திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், இந்திய சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களான அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் 39 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வரவேற்பைப் பெறும் கமல் - அமிதாப் நடிப்பு
இந்திய திரைத்துறையில் இந்த ஆண்டு மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் “கல்கி 2898 கி.பி” திரைப்படம், அதன் பிரம்மாண்ட உருவாக்கம், தனித்துவமான கதைக்களம், வித்தியாசமான தீம் மற்றும் முன்னணி நட்சத்திர நடிகர்கள் என இந்திய சினிமாவில் புதிய வரலாற்றுக்கு வித்திட்டுள்ளது.
கல்கி 2898 கிபி திரைப்படத்தில், அமிதாப் பச்சன் அழியாத அஸ்வத்தாமாவின் பாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், கமல்ஹாசன் சுப்ரீம் யாஸ்கின் கதாபாத்திரத்தில் கொடுங்கோல் வில்லனாக நடித்துள்ளார். இருவரும் மிக நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இணைந்தது, படம் பற்றிய அறிவிப்புகள் வெளியானது முதலே படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.
1985க்குப் பிறகு இணையும் ஜாம்பவான்கள்
‘கிரஃப்தார்' என்ற இந்தி ஆக்ஷன் திரைப்படத்தில் கடந்த 1985ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். ரஜினிகாந்த் இந்தப் படத்தில் கௌரவக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் கிட்டத்தட்ட 39 ஆண்டுகளுக்குப் பிறகு அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் திரையில் மீண்டும் இணைவதைக் காணும் வாய்ப்பிற்காகவும், படத்தின் புதுமையான கதைக்களம் மற்றும் பல நட்சத்திரங்களை ஒன்றாகக் கண்டுகளிக்கவும் ரசிகர்களும் திரையுலகினரும் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் வெகு சில காட்சிகளில் தோன்றி வில்லனாக மிரட்டியிருக்கும் கமல் மற்றும் அஸ்வத்தாமாவாக படம் முழுவதும் கல்கி அவதாரமெடுக்கும் குழந்தையைக் காப்பாற்றப் போராடும் அமிதாப் பச்சன் என படத்தில் போட்டி போட்டு நடித்துள்ள இருவரது நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள, கல்கி 2898 கிபி திரைப்படத்தில், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி, ஷோபனா, மிருணாள் தாக்கூர், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என பான் இந்தியப் படமாக உருவாகியுள்ள கல்கி படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மகாபாரதப் போர் முடிந்து சுமார் 6000 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் வகையில் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்துக்கு லீட் கொடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ள கமலின் காட்சிகள் இரண்டாம் பாகத்தில் அதிகம் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.