தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன், தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நல்ல திரைக்கதைகளை தேர்வு செய்து தயாரித்து வருகிறார். அந்த வகையில் அவரின் எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் 'கூழாங்கல்' படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'கொட்டுக்காளி'. நடிகை அன்னா பென் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். 


 



 



ஒரு நகைச்சுவை நடிகராக இருந்த நடிகர் சூரி, வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இன்று முன்னணி ஹீரோக்களின் பட்டியலில் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் கருடன் படத்தை தொடர்ந்து மிரட்டலான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டுகளை 'கொட்டுக்காளி' படத்தின் மூலம் குவிக்க உள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே பல சர்வதேச விழாக்களில் பாராட்டுக்களை குவித்துள்ளதால் 'கொட்டுக்காளி' படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை முதல் மாலை வரை ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களின் கோர்வையாக இப்படம் உருவாகியுள்ளது. 


 


படம் வெளியாக இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரொமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் படத்தின் பிரீமியர் காட்சி வெளியிடப்பட்டது. படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் பாராட்டுகளை குவித்து வரும் வேளையில் உலகநாயகன் கமல்ஹாசன், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியுடன் இணைந்து இப்படத்தை இன்று பார்த்தார். படத்தை பாராட்டி தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் படம் குறித்த தனது கருத்தையும் பகிர்ந்துள்ளார். 


 







"தம்பி சூரியை தவிர வேறு தெரிந்த முகங்கள் இல்லை. ஆனால் அவரும் மூன்று நிமிடத்துக்கு மேல் பாண்டியனாக மட்டுமே தெரிந்தார். பின்னணி இசை ஏதுமின்றி இயற்கையின் இசை மட்டுமே. இனி இது போன்ற நல்ல சினிமாக்கள் அடிக்கடி வரும் என கூறும் கட்டியம். அழகான சினிமா மொழியில் அற்புதமான பகுத்தறிவு கதை தான் 'கொட்டுக்காளி'. இந்த அழகான படத்தை கொடுத்தமைக்கு இயற்கைக்கு மட்டுமல்ல சிவகார்த்திகேயனுக்கும் நன்றி" என தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் இந்த பெருமையான தருணத்தை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.