பிரபல நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இன்று (ஏப்ரல்.05) தனது பிறந்த நாள் கொண்டாடும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
மலையாளத்தில் தொடங்கி தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாக்களில் கடந்த சில ஆண்டுகளாக பிரபல நடிகையாக வலம் வருபவர் கல்யாணி பிரியதர்ஷன்.
மலையாள சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான பிரியதர்ஷன் - மலையாள நடிகை, கமல்ஹாசனின் விக்ரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளவருமான நடிகை லிசி ஆகியோரது மகள் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.
என்ன தான் மலையாள சினிமா பின்புலத்தைக் கொண்டிருந்தாலும் இவர் அறிமுகமானது ‘ஹலோ’ எனும் தெலுங்கு படத்தில். 2017ஆம் ஆண்டு ‘ஹலோ’ படத்தில் நாகார்ஜூன் மகன் அகில் ஜோடியாக அறிமுகமான கல்யாணி, தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘ஹீரோ’ படத்தில் 2019ஆம் ஆண்டு அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து தன் தாய் வீடான மலையாளத்திலும் கால் பதித்து கவனம் செலுத்தத் தொடங்கிய கல்யாணி, சிம்புவுடன் இணைந்து நடித்த மாநாடு படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை சென்றடைந்தார். மேலும் 2022ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் க்யூட்டாக கவனமீர்த்த கல்யாணி, ஹ்ரிதயம், ப்ரோ டேடி, தல்லுமாலா என வெற்றிப் படங்களைக் கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களின் மனங்களையும் கவர்ந்தார்.
பி ஏ ஆர்க்கிடெக்சர் படித்துள்ள கல்யாணி பிரியதர்ஷன், முதலில் சினிமா துறையில் ப்ரொடக்ஷன் டிசைனராக நுழைந்துள்ளார். தமிழில் இருமுகன், இந்தியில் க்ரிஷ் 3 படங்களில் பணிபுரிந்துள்ள இவருக்கு நடிப்பின் பக்கம் ஆர்வம் திரும்பியுள்ளது.
இந்திய சினிமாவின் வழக்கமான அழகியல் கோட்பாடுகளுக்குள் அடங்காத தோற்றத்துடன் இருந்த கல்யாணி, பின் நடிப்புத் துறையில் நுழைந்து, அதில் பொருந்தி, தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக கவனமீர்த்து வருகிறார்.
தான் முதன்முதலில் மாடலிங் செய்யப்போகிறேன் எனக் கூறியபோது தன்னை தன் நண்பர்கள் கேலி செய்ததாகவும், அதனையே உத்வேகமாக மாற்றி நடிப்பில் தான் கவனம் செலுத்தியதாகவும் கல்யாணி தன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் மைக்கில் ஃபாத்திமா என்ற படத்தில் மட்டும் தற்போது நடித்து வரும் கல்யாணி மென்மேலும் தென்னிந்திய சினிமாவில் கோலோச்ச வாழ்த்துகள்!