முதுநிலை ஆசிரியர் பணியில் தமிழில் படித்தவர்களுக்கு அநீதி இழைப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ள ராமதாஸ், ஆசிரியர் தேர்வு வாரியம் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்துப் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியமும், பள்ளிக்கல்வித் துறையும் செய்த தவறுகள்தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் எனும் நிலையில், அதற்காக தவறு இழைக்காத தமிழ்வழி பட்டதாரிகளை தண்டிப்பது கண்டிக்கத்தக்கது; அதை ஏற்க முடியாது.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கு 3209 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதே ஆண்டில் நவம்பர் மாதத்தில் கணினி வழித் தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 10 மற்றும் 13ஆம் தேதிகளில் வெளியிடப்பட்ட இடைக்காலமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியலில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் நானூற்றுக்கும் மேற்பட்டோர் இடம்பெற்றிருந்தனர். அக்டோபர் மாதம் 12, 13 மற்றும் 14ஆம் நாட்களில் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு அவர்கள் அழைக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டிருக்க வேண்டும்.
தமிழ் வழியில் பயின்றோருக்கு அநீதி
ஆனால், தமிழ் வழியில் பயின்ற ஏராளமானோர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படவில்லை. அதன் வாயிலாக தமிழ்வழியில் பயின்றோருக்கு எந்த காரணமும் இல்லாமல் ஆசிரியர் பணி வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்திருக்கும் விளக்கம் எவ்வகையிலும் ஏற்க முடியாதது. வினாக்களுக்கான விடைகளில் காணப்பட்ட குளறுபடிகளை சுட்டிக்காட்டி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்குத் தொடர்ந்தவர்களின் எண்ணிக்கைக்கு இணையான பணியிடங்களை காலியாக வைத்திருக்க ஆணையிட்டிருந்தது. அதைக் காரணம் காட்டி, 56 பணியிடங்களை மட்டும் நிரப்பாமல் விட்ட தேர்வு வாரியம், மீதமுள்ள பணிகளை நிரப்பி விட்டது. அதில், தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கான 20% இட ஒதுக்கீடு முழுமையாக கடைப்பிடிக்கப்படவில்லை.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சமூகநீதிக்கு எதிரான இந்த அணுகுமுறையால் பாதிக்கப்பட்டவர்கள் அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதை விசாரித்த உயர் நீதிமன்றம், அவர்கள் தரப்பில் உள்ள நியாயங்களை சுட்டிக்காட்டி, அவர்களுக்கு பணி வழங்க முடியுமா? என்று வினவினர். ஆனால், அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டு விட்டதால், அவர்களுக்கு பணி வழங்க முடியாது என்று மறுத்து விட்டது. எனினும், அதை ஏற்காத உயர்நீதிமன்றம், காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தமிழ்வழியில் படித்தவர்களை கலந்தாய்வுக்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு தகுதி இருந்தால் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என 27.10.2022 அன்று ஆணையிட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நாளில் இருந்து 4 வாரங்களில் தமிழ்வழியில் பயின்றோருக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பணி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அதன்பின்னர் 6 மாதங்களாகியும் அவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. இது தமிழுக்கு இழைக்கப்படும் இரண்டகம் (துரோகம்) ஆகும்.
20% இட ஒதுக்கீடு இல்லாதது ஏன்?
தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் 20% வழங்கப்பட்டது. ஆனால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியமர்த்தலில் தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இது மிகப்பெரிய சமூக அநீதியாகும்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே சமூகநீதிக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது, பொதுப்பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கணக்குக் காட்டி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதை பா.ம.க. கடுமையாக எதிர்த்தது. அதுகுறித்த வழக்குகள் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நடந்தபோது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நீதிபதிகளின் கடுமையான கட்டணங்களுக்கு ஆளானது. ஆனால், அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாத ஆசிரியர் தேர்வு வாரியம், இப்போது மீண்டும் அதே சமூகநீதிப் படுகொலையை செய்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பு திட்டமிட்டு பறிக்கப் படுகிறது என்றால், அதை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சிக்கலில் உடனடியாக தலையிட்டு, தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆணையிட வேண்டும்''.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.