Prabhas Kalki 2898 AD Trailer


நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் கல்கி 2898. இப்படத்தின் அமிதாப் பச்சன் , தீபிகா படூகோன் , கமல்ஹாசன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். வைஜயந்தி மூவீஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. சுமார் 600 கோடி செலவில் 3 ஆண்டுகள் எடுக்கப் பட்டுள்ள இப்படத்திற்கு செர்பிய நாட்டு ஒளிப்பதிவாளர்  Djordje Stojiljkovic என்பவர் ஓளிப்பதிவு செய்துள்ளார். வரும் ஜூன் 27 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 



கல்கி 2898 டிரைலர் (Kalki 2898 AD Trailer)


கருடப் புராணத்தின் படி கிருஷ்ணனின் பத்தாவது மற்றும்  கடைசி அவதாரம் கல்கி. அதன்படி கலியுகத்தில் கடைசிக் கட்டத்தில் தோன்றும் கல்கி துஷ்ட சக்திகளை அழித்து கலியுகத்தை முடித்து வைப்பார். இதனை அடிப்படையாக வைத்து சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகி இருக்கிறது பிரபாஸின் கல்கி 2898 AD. 


 






உலகின் முதலும் கடைசியுமான நகரமாக காசி இருக்கிறது. தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்த ஒரு உலகத்தில் உலகை மொத்தமாக தன் வசப்படுத்த முயற்சிக்கிறார்கள் ஒரு தரப்பினர். இவர்களை எதிர்த்து போராட வீதியால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒருவனை தேடி வருகிறது இன்னொரு தரப்பு. அதுதான் பைரவா என்கிற பிரபாஸ் . எதைப் பற்றியும் கவலையில்லாமல் சொற்ப தொகைக்காக சின்ன சின்ன சண்டைகளில் ஈடுபடும் ஒருவனாக இருக்கும் பைரவா உலகின் அழிவை எப்படி காப்பாற்றப் போகிறார் என்பதே இப்படத்தின் கதையாக இருக்கும். அப்படி அனைவரும் பில்ட் அப் கொடுக்கும் அந்த துஷ்ட சக்தி வேறு யாரும் இல்லை உலகநாயகன் கமல்ஹாசன் தான். இத்தனை நாட்களாக ரசிகர்கள் ஆவலாக கேட்டு வந்த கமலின் தோற்றம் இந்த டிரைலரில் வெளியாகியுள்ளது.


ஸ்டார் வார்ஸ் பாணியில் விதவிதமான ஆயுதங்கள் , வாகனங்கள் பலவிதமான புராணக் கதைகளின் கதாபாத்திரங்கள் என ஒரு ஃபேண்டஸி படத்திற்கான எல்லா அம்சங்களையும் இந்த டிரைலரில் பார்க்க முடிகிறது. ஒன்றே ஒன்று மட்டும் மாறவில்லை. பிரபாஸின் அதே வழக்கமான எக்பிரஷன்கள். தீபிகா படூகோன் , அமிதாப் பச்சன் , திஷா பதானி , பசுபதி என பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளார்கள். ஒரு சில இடங்களில் மிகைப்படுத்தப் பட்ட சண்டைக் காட்சிகல் இருந்தாலும் வி.எஃப் எக்ஸ் மற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகள் நம்பிக்கை அளிக்கின்றன. சந்தோஷ் நாராயணின் இசை திரையரங்கத்தில் படம் பார்க்கும் அனுபவத்தை இரட்டிப்பாக்கும் என்று தெரிகிறது.